தவெகவிற்கு எதிராக களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்… தாக்குப்பிடிப்பாரா விஜய்? – Kumudam

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெறாத தவெகவிற்கு, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ. அமைச்சரவையில் இடம்பெறுவார்களா? திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி சேருவார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. 

இந்த நிலையில் தான், திமுக கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான விசிக, ஆட்சியில் பங்கு பெற்றதால், கம்யூனிஸ்டுகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ ஜனநாயகத்தை காப்பாற்ற மட்டுமே தவெகவிற்கு ஆதரவளித்தோம். அதுவும் வெளியில் இருந்துதான் ஆதரவு. அவர்கள் ஏதாவது ஏடாகுடமாக செய்தால் காம்ரேடுகள் யார் என்று காண்பிப்போம் என்று சிபிஐ, சிபிஐஎம் ஆகியவை கூறின.

இத்தகையச் சுழலில், திமுக மட்டுமல்ல தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், தவெக அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துள்ளது சிபிஐ.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தரப்பு கூறுவதாவது, ”மத்திய ஆர்எஸ்எஸ் – பாஜக அரசின் அரசியல் கருவியாக, ஜனாதிபதி ஆட்சி எனும் பெயரில் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சியைக் கொண்டுவர முயன்றார். மேலும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஜனநாயக நெறிமுறைகளை மீறி மாற்றாட்சியை உருவாக்க வேறு சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. இவை இரண்டையும் நிராகரித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், அவற்றைத் தடுக்க த.வெ.க. ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தருவதென முடிவு செய்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது சொந்த முடிவை எடுக்க, யாரிடமும் வழிகாட்டுதலோ, அனுமதியோ பெற வேண்டிய அவசியமும், அவ்வாறு ஏதும் நிகழவும் இல்லை.

மக்கள் நலன் நிபந்தைகளைக் கொண்டு, த.வெ.க. அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. அமைச்சரவையில் பங்கேற்க மறுத்துவிட்டது. அதேபோல், சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதாகவும், சென்ற அரசின் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதாகவும் தவெக அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், தனது அரசியல் நிலைக்கு மாறான செயல்பாட்டில் அரசு ஈடுபடுமானால், பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, திமுகவுடன் தாங்கள் கூட்டணியில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அகில இந்திய அளவில் இந்தியாகூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிப்பதாகவும், தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறி விட்ட்தால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, எந்தக் கூட்டணியிலும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை எழவில்லை என்றும் வீரபாண்டியன் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தவெக அரசுக்கு எதிராக போராட்டத்தையும் அறிவித்துள்ளது சிபிஐ.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ள ஐந்து ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்து கடன் சுமையில் இருந்து விடுவிக்க வேண்டும், காண்ட்ராக்ட், அவுட்சோர்ஸ் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் துவக்க வேண்டும் போன்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 29 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சிபிஐ தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *