கேள்வி: `விராலிமலை மக்கள் மூன்று முறையும் உங்கள் மீது அன்பு செலுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வித்தியாசத்தை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளனர். அந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனில், நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் அல்லவா? அது என்ன மாற்றம் என்று கூறிவிடுங்களேன்!’
சி.விஜயபாஸ்கர்: “அதற்காக மாற்றம் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் நான் தீவிரம் காட்டி வருகிறேன். விராலிமலை மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு வாக்களித்தார்களோ, அதை நான் செய்ய வேண்டும். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்னோடு பயணிப்பவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும். தற்போது கருத்துக்களைக் கேட்டுள்ளேன், அவ்வளவுதான்.”
கேள்வி: `அண்ணா திமுகவில் நீங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளீர்கள், அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள். அண்ணா திமுகவின் தற்போதைய செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா? ஏனெனில், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்த நீங்கள் நேற்றுதான் ஒன்று சேர்ந்துள்ளீர்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய தினம் நீங்கள் அதிரடியாகக் கூட்டம் கூட்டி கருத்துக்களைக் கேட்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது?’
சி.விஜயபாஸ்கர்: “நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இதில் ‘அதிரடி’, ‘பரபரப்பு’ போன்ற வார்த்தைகள் தேவையில்லை. நான் மிகுந்த நிதானத்துடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் இருக்கிறேன். கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்களைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். அதனால்தான் மதியம் 12 மணிக்கு மேல் கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, தற்போது திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். நீங்களும் என்னைச் சூழ்ந்துகொண்டதால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அனைவரும் வந்து சந்தித்துத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர், அதைக் கேட்க வேண்டியது என் கடமை.”
கேள்வி: `நாளை சபாநாயகரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?’
சி.விஜயபாஸ்கர்: “நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணற்ற திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனக்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 அழைப்பிதழ்கள் வருகின்றன. என்னுடைய பயணம் அதை நோக்கியே இருக்கும்.”
கேள்வி: `நேற்று இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதாக அனைத்து அதிமுகவினரும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். தற்போது நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?’
சி.விஜயபாஸ்கர்: “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்தான் என்னுடைய பயணம் தொடர்கிறது என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.”
கேள்வி: `இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசும்போது, 90 சதவீத அதிமுகவினர் இன்னும் வந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள் என்றும், சனிக்கிழமை கூட பல முன்னாள் அமைச்சர்கள் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளாரே?’
சி.வி.விஜயபாஸ்கர்: “நான் திருமண நிகழ்ச்சிகளில் இருந்ததால் அந்தச் செய்தியையோ, பேட்டியையோ பார்க்கவில்லை. இதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. நீங்கள் எவ்வளவு ஆர்வமாகக் கேட்டாலும் என்னுடைய பதில் ஒன்றுதான். காலையில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தது உண்மை. நான் எதிர்பார்க்காத அளவிற்கு எண்ணற்ற மகளிரும், இளைஞர்களும், ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்களும் வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பதும் உண்மை. அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர், அதை நான் முழுமையாக உள்வாங்கி, மனதில் இருத்தியுள்ளேன். தகுந்த தருணத்தில் அது குறித்து உங்களிடம் விரிவாகக் கூறுவேன்.”
சி.விஜயபாஸ்கர் தன் நேர்காணலில் எவ்வளவுதான் “நான் நிதானமாக, பொறுமையாக, அமைதியாக இருக்கிறேன்” என்று மழுப்பினாலும், இபிஎஸ் தலைமைக்கு ஒரு மெல்லிய ‘செக்’ வைத்துள்ளார் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்குப் புரியாமல் இல்லை.
“மக்கள் என்ன நினைக்கிறாங்களோ… அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதை ஒட்டித்தான் என்னுடைய கருத்து இருக்கும்” என்று அவர் அழுத்தமாகக் கூறுவது, கட்சித் தலைமையின் முடிவை விட தொகுதி மக்களின் முடிவே தனக்கு முக்கியம் என்பதைத் துல்லியமாக உணர்த்துகிறது.
ஏற்கனவே அண்ணா திமுகவின் முக்கியத் தலைகள் தவெக பக்கம் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், விராலிமலை வேந்தர் சி.வி.விஜயபாஸ்கரின் அரசியல் பயணமும் இறுதியில் தவெக பக்கம் சாயவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள் அவரை நன்கறிந்த அரசியல் புள்ளிகள்…!