கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான இளையராஜா-வை தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் தற்போது வரை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை தற்போது வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் இளையராஜா. இவரை சில தினங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட சென்னையை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசு, தான் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார்.

ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள், நாங்கள் சொல்வது படி நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா, `எனக்கு அதில் விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்” என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசு, `தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று மிரட்டியுள்ளார்.