இதுதான் திமுகவின் நோக்கம்
நம்மிடம் பேசிய அவர், ” தற்போதைய சூழலில் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நிலை வரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கொண்டு செல்லாது. இத்தகைய கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசுவதன் வழியாக, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் தன்னம்பிக்கையைக் குலைத்து, அவர்களிடையே ஒருவித சந்தேகத்தையும் கேள்விக்குறியையும் உருவாக்குவதே திமுகவின் நோக்கம்.
மேலும், இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், திமுக தனது கட்சியினரைத் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் தக்கவைத்துக் கொள்கிறது. இதற்கு உதாரணமாக, கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், தன்னை இன்னும் முதல்வர் என்றே அழைப்பதாகவும், இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்ற தொனியில் பேசியதை பார்க்க முடிந்தது.

தவெகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி
அதே நாளில், தவெகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரியவந்ததால், வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளரைத் திமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. அதிமுகவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறுவதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்ததாகவே, திராவிடக் கட்சிகளில் ஒரு ஒன்றியச் செயலாளர் நகர்வது பார்க்கப்படுகிறது.
எனவே, தங்கள் கட்சியைப் பாதுகாத்து, அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையைத் தொண்டர்களுக்கு வழங்க திமுக இந்த உத்தியைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் கவர்ச்சியால் மக்கள் வாக்களித்துவிட்டார்கள், வாக்களித்தவர்கள் தற்போது வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று கூறிவந்த திமுக, அதன் நீட்சியாக இப்போது ஆட்சி கவிழும் என்று பேசுவதன் மூலம் தவெகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்த முயல்கிறது.