மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை. அதே நேரத்தில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாமக தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தவெக தரப்புடன் பாமக நெருக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் ஒரு பேச்சு உலா வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக–பாமக கூட்டணி உருவாகலாம் என்றும், சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற பேச்சும் கோட்டை வட்டாரங்களில் கேட்க முடிகிறது.
இந்த சூழலில்தான் விசிகவின் நிலைப்பாடு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தமிழ்நாட்டில் திமுக அணி தேர்தலில் பின்னடைவைச் சந்தித்ததற்கு SIR நடவடிக்கை ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், இவர்களில் கணிசமானோர் தலித் மற்றும் உழைக்கும் மக்களாக இருக்கலாம் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார். மேலும், SIR காரணமாக திமுக அணிக்கு வர வேண்டிய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் பல தொகுதிகளில் திமுக கூட்டணியின் தோல்வி ஏற்பட்டதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. பாமக தவெக பக்கம் நகர்கிறதா? அதே நேரத்தில் விசிக மீண்டும் திமுகவுடன் தனது அரசியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறதா? காரணம், பாமக இருக்கும் இடத்தில் விசிக ஒருபோதும் இருக்காது என்ற திருமாவளவனின் நிலைப்பாடு தான்.
இப்போதைக்கு பாமக எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்பதே அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. விசிகவும் திமுக கூட்டணி தொடர்பாக எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், தேர்தலுக்குப் பிறகான கூட்டணி கணக்குகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் தொடங்கிவிட்டன.
எனவே, இடைத்தேர்தல் முடிந்த பிறகு தமிழ்நாடு அரசியலில் கூட்டணி கணக்குகள் எந்தப் பக்கம் திரும்பும் என்பது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளில்தான் தெரியும்.

