Tamilnadu
oi-Pavithra Mani
தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் தவெகவும், மதிமுகவும் இரட்டை குழல் துப்பாக்கி என்று துரை வைகோ கூறினார்.
தாராபுரம் மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதன்மை செயலாளர் துரை வைகோ, “தமிழகத்தை சீரழிக்கும் தீய சக்தி ஒழிக்கப்பட வேண்டும். அது ஒன்று தான் எங்கள் நோக்கம். எங்கள் கட்சிக்காரர்களுக்கு மரியாதை கொடுத்தால் போதும். உங்களுக்கு உயிரை கூட கொடுப்போம். எங்கள் கட்சிக்கும், மற்ற கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. தலைவர் சொல்லும் ஒரு கட்டளைக்காக பணியாற்றுவார்கள்.

திமுக பவர்சென்டர் பிரச்சனை
திமுக தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரும் இது திணிக்கப்பட்ட தேர்தல் என விமர்சிக்கிறார்கள். இது தவெகவால் வந்த தேர்தல் என்று சொல்கிறார்கள். இது தவறு. இந்த தேர்தல் எதற்காக வந்தது. தேர்தலில் எல்லா கட்சியும் கூட்டணி அமைத்தனர். தவெக மட்டும் தனித்து நின்றனர். 108 இடங்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். அரசியல் சாசனப்படி அது அருதி பெரும்பான்மையுடனான வெற்றி இல்லை.
எந்த இயக்கத்திற்கு அதிக எம்எல்ஏக்கள் உள்ளனரோ, அவர்களை ஆட்சியமைக்க தான் ஆளுநர் கூப்பிடுவார். அதன்படி தவெகவை அழைத்தனர். அவர்கள் அரசாங்கம் அமைத்தனர். நாங்கள் ஆதரவு கொடுத்தோம். திமுக எங்களுக்கு எதிரி இல்லை. அது அருமையான இயக்கம். தமிழகத்திற்காக எவ்வளவோ தியாகங்களை செய்துள்ளனர். திமுகவில் உள்ள அந்த பவர்சென்டர் தான் பிரச்சனை. அந்த கட்சிக்கே அந்த பவர்சென்டர் பிரச்சனை.
யார் காரணம்
விஜய் சிஎம் ஆகிவிடக்டகூடாது. அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அந்த பவர் சென்டர் கூறுகிறது. எடப்பாடிக்கு ஆதரவளிக்கலாம், அவர் சிஎம் ஆகலாம். ஒருபோதும் விஜய் சிஎம் ஆகக்கூடாது என்றார். அதைக்கேட்டு ஸ்டாலின், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். வேறு வழியில்லாமல் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்படிப்பட்ட அழைப்பு வந்ததால் அவரும் ஏற்றார்.
இதை ஏற்க முடியாமல் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற அவர்களின் தலைவர்களே ஏற்க மாட்டார்கள் என்பதால் ராஜினாமா செய்தார்கள். இது திணிக்கப்பட்ட தேர்தல் தான். இது திமுக பவர்சென்டர், எடப்பாடியால் வந்த தேர்தல். புரட்சி தலைவர், அம்மையார் ஒப்புக் கொள்வார்களா என அதிமுகவினரிடம் கேள்வி கேட்க வேண்டும்.
இரட்டை குழல் துப்பாக்கி
எதிர்காலத்தில் மதிமுக சட்டசபையில் எதிர்க்கட்சியாக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் கூறினார். அது ஒருபோதும் நடக்காது. மதிமுக தவெக இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படும். தமிழகத்தை வஞ்சித்த துரோகிகளை நோக்கி சுடும் இரட்டை குழல் துப்பாக்கி தான் மதிமுக, தவெக. சுயமரியாதையை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. லஞ்சம் இல்லாத ஆட்சியை உருவாக்குவது நோக்கம். எவ்வளவு பேர் மாற்றத்தை உருவாக்க நினைத்ததை, விஜய் சாதித்துள்ளார்” என்றார்.