இன்று தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டிற்கு செய்தியாளர்கள் அழைக்கப்படாதது பேசுபொருளானது.
இதையடுத்து முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது…
“எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், எங்கள் எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் மற்றும் என்னை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, குறிப்பாகத் தொழில் துறை வளர்ச்சியை விட முக்கியமானது வேறு எதுவுமே இல்லை.
நம் மாநிலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு முதலீடும், அமைக்கப்படும் ஒவ்வொரு தொழிற்சாலையும், உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்பும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது.
ஆம், ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறது என்பதையெல்லாம் தாண்டி நாங்கள் இதை வரவேற்கிறோம்.

அதனால்தான், இன்று 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படும் உரிமைகோரலில் கூடுதல் வெளிப்படைத்தன்மை தேவை என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இன்றைய நிகழ்வில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது என்பதே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது!
கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் முதலீட்டு வளர்ச்சியை உலகிற்கு எடுத்துரைப்பதில் சென்னையில் உள்ள தொழில் துறைப் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களை இந்த நிகழ்விலிருந்து ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்? அந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியலை இதுவரை ஏன் வெளியிடவில்லை?