“தவெக `ஹனிமூன் பீரியட்' என்பதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல" – உதயநிதி ஸ்டாலின்

Spread the love

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விவகாரம், தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நிலையில், அருள் விக்னேஷை கைதுசெய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-யிடம் தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று புகார் மனு அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “புகார் அளிக்க வந்தோம் ஆனால், டி.ஜி.பி ‘சிங்கப்பெண் படை’யின் பயிற்சி நிகழ்ச்சிக்காகச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்தச் சிங்கப்பெண் படைக்கு அப்படி என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள்? அவர்களுடைய பணிதான் என்ன? இந்தச் சிங்கப்பெண் படையை நீங்கள் எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? இதனை முதலமைச்சர் ஏதோ ஒரு பெரிய சாதனையைப்போல அறிவித்தார். ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்கெட்டுச் சந்தி சிரிக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் எத்தனை கொலைகள், எத்தனை பாலியல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளன, போதைப் பொருள் கடத்தல் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது. அரசின் அலட்சியப் போக்கின் விளைவாக, இன்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களில் 70 முதல் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளாகவே உள்ளனர். அதில் சாதாரண நிர்வாகி முதல் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் வரை எனப் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்களே தவறான செயல்களிலும், வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ விவகாரத்தில் அரசிடமிருந்து எந்தவொரு சரியான பதிலும் இல்லை. பல மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்த மகளிரையே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியிருக்கும் கொடுமைகளெல்லாம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அருள் விக்னேஷ் - விஜய்
அருள் விக்னேஷ் – விஜய்

இதற்கெல்லாம் உச்சபட்சமாக, அருள் விக்னேஷ், மாவட்டத்தின் ஆட்சித் தலைவருக்கே தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்தியாவின் வரலாற்றிலேயே மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதும், மதுபோதையில் அவருடைய முகாம் அலுவலகத்திற்கே சென்று தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதும் போன்ற கேவலமான நிகழ்வு எங்கேயும் நடந்ததில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த இரண்டு மாதங்களிலேயே அதாவது ஜூலை மாதமே இது நடந்துள்ளது. பொதுவாக ஒரு புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், முதல் ஆறு மாத காலத்தை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதற்காக ‘ஹனிமூன் பீரியட்’ (Honeymoon Period) என்று சொல்வோம்.

ஆனால், நாம் சொன்ன அந்த ‘ஹனிமூன் பீரியட்’ என்ற வார்த்தையை இந்தச் சட்டமன்ற உறுப்பினரும், முதலமைச்சரும் அதன் நேரடி அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டு செயல்பட்டுவிட்டார்கள் போலும். ஜூலை மாதம் 31-ம் தேதியிலிருந்து இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்துத் தொடர்ந்து பத்திரிகையாளர்களும், சமூக வலைதளங்களில் பலரும் எழுத ஆரம்பித்தார்கள். எங்களுடைய கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி இந்தச் செய்தியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார். ஆனால், பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இது குறித்துக் கேட்கும்போது, சம்பந்தமே இல்லாமல் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஓர் அமைச்சர், தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான பதில்களையே அளித்து வருகிறார்.

முதல்வர் விஜய்

116 நாள்களுக்கு முன்னதாகவே, பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் இது குறித்துத் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். அதற்குத் தலைமைச் செயலாளர், “நீங்கள் வேறு மாவட்டத்திற்குப் பணியிட மாறுதல் வாங்கிச் சென்றுவிடுங்கள் அம்மா” என்று கூறியுள்ளார். இப்போது ஒவ்வொன்றாகத் தோண்டத் தோண்டத்தான் இந்த உண்மைகளெல்லாம் வெளியே வருகின்றன. கடந்த ஒரு மாதமாகச் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் குறித்து அனைவரும் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அந்தச் சட்டமன்ற உறுப்பினர் மீது இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நேற்று நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாகவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. இதற்குக் கூட 116 நாள்கள் ஆகியுள்ளது. இந்த 116 நாள்களாகச் சட்டம்-ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் இந்த முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா? அதுமட்டுமல்லாமல், இந்தக் குற்றச்சாட்டு வெளியே வந்ததிலிருந்து ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற ஆன்லைன் வன்முறையாளர்கள், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரியையே தாக்கித் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று நான் டி.ஜி.பி அவர்களிடம் அளித்துள்ள புகார் மனுவில், ஜூலை 31-ஆம் தேதியே புகார் கொடுக்கப்பட்டும் அதனை மூடி மறைக்க முயற்சி செய்த தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தலைமைச் செயலாளர் இந்த விவகாரத்தை முதலமைச்சரிடம் தெரிவித்தாரா, இல்லையா? அப்படித் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு. ஒருவேளை தெரிவித்திருந்தால், முதலமைச்சர் ஏன் 116 நாள்களாக இன்றுவரை வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார்? சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்துக் கேள்வி கேட்டால், அந்தச் சட்டமன்ற உறுப்பினர் பதிலுக்கு முதலமைச்சரைப் பார்த்து, “நீங்கள் மட்டும் ஒழுங்கா?” என்று கேட்டுவிடுவாரோ என்ற பயம் முதலமைச்சருக்கு இருக்கலாம். அதனால்கூட அவர் கேட்காமல் இருந்திருக்கலாம்.
ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“இப்படிப்பட்ட ஒரு சம்பவமே நடக்கவில்லை” என்று இவ்வளவு நாள்களாகச் சில அமைச்சர்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்களே, இப்போது அவர்கள் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அதேபோல, துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னுடைய வீட்டிற்கு மனு கொடுக்க வந்த ஒருவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தச் சம்பவம் நடந்து இதுவரை 16 நாள்கள் ஆகியும், அதன் மீதும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, துணை சபாநாயகர் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்களது புகார் மனுவில் வலியுறுத்தியுள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கடந்த நான்கு மாதங்களாக இவர்கள் அனைவரும் இணைந்து இந்தக் குற்றத்தை மூடி மறைக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இந்த வழக்கைத் தாமாக முன்வந்து சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இந்த அரசின் மீதோ, முதலமைச்சரின் மீதோ எங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. எனவே, இவ்வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுவதோடு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரையும், துணை சபாநாயகரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

“பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம்” என்று சொல்லித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். இதுதான் நீங்கள் கொண்டு வந்த மாற்றமா? இது மாற்றமல்ல, ‘துர்நாற்றம்’ என்று தமிழ்நாட்டு மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதும் பெண் வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) மிரட்டியதாகப் புகார் கூறப்படுகிறது. திமுக இளைஞரணி நிர்வாகி ஆஷிக் மீது ஒரு பெண் குற்றம்சாட்டியவுடன், எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் விசாரித்தோம். இப்போது ஆஷிக் மீது புகார் அளித்துள்ள அதே பெண்மணி தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே ஆஷிக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஆனால், அந்தப் புகாரைக் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை. அதை முறையாகப் பதிவு செய்யவோ, விசாரிக்கவோ இல்லை.
இப்போது, திமுக நிர்வாகி மீது ஒரு குற்றச்சாட்டு என்றவுடனேயே, அதனைப் பெரிதுபடுத்தி ஊதிப் பெரிதாக்கி, தங்களது தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இப்போது காவல்துறை இவர்களது கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது? எனவே, சரியான ஆதாரங்கள் இருந்தால் அதன் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நாங்களும் கேட்டுக்கொள்கிறோம்.
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. எனவே, முதலமைச்சர் தயவுசெய்து இனியாவது தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *