தாரகை பேச்ச கவனிச்சிங்களா? Patch ஆகிறதா திமுக-காங்.,? – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. இன்று பேசியது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், சட்டசபையில் திமுகவுடனான கடந்தகால கூட்டணியை நினைவுகூர்ந்து தாரகை கத்பர்ட் பேசியுள்ளார்.

சமூக நலத்துறை, வேளாண்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர், பாஜகவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் திமுகவும் காங்கிரஸும் நீண்ட காலமாக ஒன்றிணைந்து செயல்பட்டதாக குறிப்பிட்டார்.

“பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ஆளுநர் மூலமாக தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்கலாம் என்ற சூழல் இருந்தது. மதவாத ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுதியாக இருந்தது” என அவர் தெரிவித்தார். மேலும், தாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை தொகுதிக்கு அனுப்பி உதவியதாகவும் தாரகை கத்பர்ட் கூறினார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி வரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் திமுகவுடன் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக – காங்கிரஸ் போராட்டங்களை நினைவுகூர்ந்த தாரகை

NRC, CAA, தொகுதி மறுவரையறை மற்றும் நீட் உள்ளிட்ட விவகாரங்களில் திமுகவும் காங்கிரஸும் இணைந்து போராடியதை சுட்டிக்காட்டிய அவர், “இன்று எங்களுடன் முரண்பாடாக இருந்தாலும், கொள்கையில் எங்களுடன் சேர்ந்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

மேலும், “நாம் கொள்கை ரீதியாக ஒன்றாகவே இருந்தோம். அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. எனவே எங்களை பார்த்து முதுகில் குத்திவிட்டீர்கள் என்று இனியும் கூற வேண்டாம்” என திமுகவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த காலத்தில் காங்கிரஸ் சந்தித்த அரசியல் வலிகளையும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை, காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கப்படாதது உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை மறந்துவிட்டு தமிழ்நாட்டின் நலனுக்காக திமுகவுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டதாக தெரிவித்தார்.

பாஜக மீது கடும் விமர்சனம்

ஜெயலலிதா பாஜகவுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டையும் தாரகை கத்பர்ட் நினைவுகூர்ந்தார். மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதில் காங்கிரஸ் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் கூறினார். அம்பேத்கரை அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவராக நியமித்ததில் நேருவின் பங்கு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சமூக நீதி கொள்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட சம்பவங்களில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜகவினரால் ஏற்பட்டதாக கூறப்படும் அவமதிப்பு குறித்தும் தாரகை கத்பர்ட் தனது உரையில் குறிப்பிட்டார்.

தவெக – காங்கிரஸ் இடையே 2029 பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தாரகை கத்பர்ட்டின் திமுக ஆதரவு தொனியிலான பேச்சு தமிழ்நாடு அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *