Tamilnadu
oi-Shyamsundar I
தாராபுரம்: தாராபுரம் தனித்தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், தவெகவின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஒருமுறை கூட எட்டிப் பார்க்காதது பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளின் அனல் பறக்கும் பிரச்சாரக் களம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இன்று தேர்தல் நடக்கிறது. இதற்கு இடையே ஆளும் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் அரங்கேறியுள்ள ஒரு மறைமுக விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

கூட்டணியில் உள்ள பிற தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தாராபுரத்தில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கூட்டணியின் மிக முக்கியத் தலைவரான திருமாவளவன் மட்டும் தாராபுரம் எல்லைப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை. இது தானாக நடந்த ஒன்றல்ல; தவெக மேலிடமே அவருக்கு “தாராபுரத்திற்கு பிரச்சாரத்திற்கு வர வேண்டாம்” என்று கறாரான உத்தரவு போட்டதன் விளைவுதான் என்ற தகவல் தற்போது கசிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்திற்கு திருமாவளவன் வரத் தடை ஏன்?
தாராபுரம் தொகுதி ஒரு தனித்தொகுதியாக இருந்தாலும், அங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பது கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மைச் சமூகங்களான கவுண்டர், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகள்தான்.
கடந்த காலங்களில் தலித் இயக்கங்களின் எழுச்சியோ அல்லது தீவிர பிரச்சாரமோ இப்பகுதியில் நிகழும்போது, அது மற்ற பெரும்பான்மை சமூக வாக்குகளை எதிர்முகாமிற்கு ஒட்டுமொத்தமாகத் திரட்டிவிடும் என்ற அச்சம் எப்போதும் தேர்தல் களங்களில் உண்டு. இந்த எதார்த்தத்தை மனதில் வைத்துக்கொண்டு, தவெக தேர்தல் வியூகக் குழுவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஒரு திட்டவட்டமான எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
“திருமாவளவன் தாராபுரத்திற்குள் பிரச்சாரத்திற்கு வந்தால், கிராமப்புறங்களில் உள்ள ஆதிக்க சமூக வாக்குகள் ஒட்டுமொத்தமாக அதிமுக பக்கம் சாய்ந்துவிடும்; எனவே அவரை உள்ளே விடக்கூடாது” என்ற கணக்கின் அடிப்படையிலேயே, அவருக்கு மிகத் திட்டமிட்டு ‘நோ என்ட்ரி’ போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியமைக்க தோள் கொடுத்த தலைவருக்கு இந்த நிலையா?
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 107 இடங்களில் தனிப்பெரும் கட்சியாக வென்றபோதிலும், தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவானது. அப்போது விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கொடுத்த ஆதரவால்தான் 120 இடங்களை எட்டி விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது. குறிப்பாக, சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும் தவெகவுக்கு பக்கபலமாக நின்றவர் திருமாவளவன்.
ஆனால், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நடைபெறும் இந்த இடைத்தேர்தலில், அதே தலைவரை மேடையில் ஏற்றினால் தங்களுக்கு வாக்குகள் குறைந்துவிடும் என்று கருதி, தொகுதிக்கே வரக்கூடாது என்று தடுப்பது கூட்டணிக் கண்ணியத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தங்களை முற்போக்கு சக்தி என்றும், பெரியாரிய, அம்பேத்கரிய பாதையில் பயணிக்கும் கட்சி என்றும் சொல்லிக்கொள்ளும் தவெக, ஒரு குறிப்பிட்ட சமுதாய வாக்குகளுக்காகத் தன் கூட்டணிக் கட்சித் தலைவரையே பொதுவெளியில் மறைத்து வைத்திருப்பது எந்த வகையான அரசியல் அறம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வட மாவட்டத்தில் ஒரு முகம்… கொங்கு மண்டலத்தில் வேறு முகமா?
மதுராந்தகம் தொகுதியைப் பொறுத்தவரை தலித் மக்களின் வாக்கு வங்கி மிக அதிகமாக உள்ள பகுதி என்பதால், அங்கு விசிகவின் செல்வாக்கையும் கூட்டணிக் கட்டமைப்பையும் இயல்பாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தவெக, மேற்கு மாவட்டமான தாராபுரத்திற்கு வரும்போது மட்டும் இந்த சாதியக் கணக்குகளுக்கு அஞ்சிப் பின்வாங்கியுள்ளது.
ஒரு தொகுதிக்கு ஒரு நீதி, இன்னொரு தொகுதிக்கு வேறொரு நீதி என தவெக காட்டிய இந்த இரட்டை வேடம் உள்ளூர் தொண்டர்களிடையேயும் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வெற்றிக்காக தலித் சமூகத்தின் வாக்குகள் தேவைப்படும் இடங்களில் கைகோர்ப்பதும், பிற சமூக வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் அதே தலைவர்களின் முகத்தை மறைப்பதும் பழைய திராவிடக் கட்சிகள் செய்த அதே பிழைதான். ஆனால், “நாங்கள் மாற்றத்திற்கான இயக்கம்” என்று மேடைகளில் பேசிவிட்டு திரைக்குப் பின்னால் இந்த அளவுக்கு தவெக சமரசம் செய்திருப்பது அதன் முகமூடியைக் கிழித்துள்ளது.
மௌனம் காக்கும் விசிக… கொந்தளிக்கும் தொண்டர்கள்
தவெக தலைமை விடுத்த இந்த மறைமுகத் தடையை ஏற்றுக்கொண்டு விசிக தலைமை அமைதி காத்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நடுநிலையான வாக்காளர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களை ஆட்சிக்குக் கொண்டுவர உதவிய ஒரு முக்கியத் தலைவரையே ஒரு தேர்தல் தொகுதியில் காலடி எடுத்து வைக்க முடியாதபடி செய்திருப்பது, தவெகவின் போலி முற்போக்கு வேடத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
டிராக்டர் ஓட்டுவதும், மாட்டு வண்டி ஓட்டுவதும், தெருவோர டீக்கடையில் அமர்வதும் வெறும் காட்சி அரசியல் மட்டுமே; திரைக்குப் பின்னால் ஓடுவது அதே பழைய சாதிய ஒடுக்குமுறைக் கணக்குகள்தான் என்பதை இந்த ‘தாராபுரம் தடை’ நிரூபித்துள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காகத் தோழமைக் கட்சியையே களத்திலிருந்து ஒதுக்கி வைத்த தவெகவின் இந்த அரசியல் கணக்கு, வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்காளர்களால் எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதுதான் இப்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.