திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 41 மற்றும் 42-வது வார்டுகளில் வாட்டர் டேங்க் ரோடு மற்றும் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரும் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், அன்றாடத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் இன்றி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களிடமும் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், குடிநீர் உடனடியாக வழங்கக் கோரியும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று (09.07.2026) திண்டுக்கல் – மதுரை சாலையில் காலி குடங்களுடன் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் திண்டுக்கல் – மதுரை சாலையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இது குறித்துத் தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதிக்கு உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும், சீரான குடிநீர் விநியோகத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.