உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்றபின் நலமாகி இல்லம் திரும்பிய இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது, “எம்.ஜி.ஆர். 1969-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தன் கைப்பட எனக்கு எழுதிய கடிதத்தை இன்றும் பாதுகாத்து வருகிறேன்” என்று கூறிவிட்டு, அதை நம்மிடம் கொடுத்தார்.
அறிஞர் அண்ணாவின் மீதும், கழகத்தின் மீதும் எவ்வளவு பற்றும் பாசமும் மரியாதையும் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார் என்பதைக் காட்டும் கடிதம் இது. அதைவிட, கழகத்தைக் காப்பாற்ற எம்.ஜி.ஆர். துடித்த துடிப்புக்கு இந்தக் கடிதமே சாட்சி! அ.தி.மு.க. உருவாக அஸ்திவாரம் போடப்பட்ட கடிதமும் இதுவே.
அன்பு தம்பிதிரு S.S.R. அவர் அவர்கட்கு
நலம் நல்குக
தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். நீங்கள் என்னிடம் வைத்துள்ள சகோதர பாசத்துக்கும் எனது நல்லுணர்ச்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கும் எனது எண்ணப்படி நீங்கள் செயல்படுவதாக கூறும் கண்ணியத் தன்மைக்கும் எனது நன்றியை மனநெகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். இரவு பகல் ஓயாப் படப்பிடிப்பின் காரணமாகத்தான் தொலைபேசியின் மூலமாக நாம் மீண்டும் சந்திக்கும் நேரத்தைக் குறிக்க இயலாமற் போயிற்று. தங்களின் கடிதத்தில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன.
அண்ணா அவர்கள் கட்டிக் காத்த கழகத்தைக் காப்பாற்ற வேண்டுமா? அண்ணா அவர்கள் கட்டிக்காத்த கொள்கையைக் காப்பாற்ற வேண்டுமா?
இந்தக் கேள்வியின் நோக்கம் எதுவாய் இருந்தாலும் எனக்குத் தெரிந்தவரை பதில் இதுதான். கொள்கை இல்லை என்றால் கழகம் இருக்காது. கழகம் இல்லை என்றால் கொள்கையைக் காப்பாற்ற முடியாது. தனிமனிதன் தோப்பல்ல. தனித்திருத்தல் தகாது என்று பல முறை கூறி இருக்கிறோம். ஒரு மனிதனின் நல்ல கொள்கை கூட மற்றவர்கள் பின்பற்றுவதைப் பொறுத்துத்தான் வெற்றி பெறு வதும் அது ஒரு மனித சமுதாயத்தின் கொள்கையாக மாறுவதும். எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவரைப் பின்பற்று பவர்கள் கொள்கைவாதியாக இருந்தே ஆக வேண்டும்.
தங்களுடைய நோக்கம் எதுவாயிருப்பினும் அதைப் பின்பற்று கிறவர்கள் அண்ணா அவர்கள் சொன்ன “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என்ற வழியில் செயல்பட்டால்தான் நோக்கம் நிறைவேறும்போது நிரந்தரமானதாகவும், எதிரிகளை உருவாக்காத வகையிலும் வெற்றி பெறும். இல்லையானால் நாம் எந்தப் பாதையைக் கடைப்பிடித்தோமோ அதே பாதையை (ஒருவேளை நல்ல நோக்கம் என்று வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் நமது நல்ல நோக்கத்தை ஏற்காதவர்கள்) பின்பற்றினால் என்னவாகும்.
குழப்பம், கூச்சல், கலக்கம், கலகம், களங்கம் இவைகளைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தமும் இதன் காரணமாக கழகம் சீர்குலையவும் கழகம் சின்னாபின்னப்படுவதால் அண்ணாவின் கொள்கை வழி நின்ற கழகமே அழிவதும் நல்ல கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் கூட அனாதைகளாக ஆக்கப்படுவதும் அதன் விளைவாக மக்களுக்குத் தொண்டு செய்யும் நண்பர்களும் அண்ணாவின் நற்கொள்கையும் நாளடைவில் மறைந்து விடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே இதுதான் என் முடிவு.
கட்டிடம் இருந்தால்தானே குடியிருக்க? அந்தக் கட்டிடம் தூய்மையானதாக இருந்தால்தானே… கட்டிடம் தேவை என்பீர்களானால் கட்டிடத்திற்குள் குடிவாழ வேண்டிய துப்புரவுகளைச் செய்தே ஆக வேண்டும். அதற்காகக் கொளுத்தி விடுவது நல்ல வழியா? எனவே கொள்கைக்காக தொண்டர்கள். அந்தத் தொண்டர்களுக்காக கழகம்.
இதனைப் பிரித்துப் பாராது கழகத் தைக் கட்டிக்காப்பதன் வாயிலாக கொள்கையைக் காப்பாற்ற முயலு வோம். கொள்கை வெற்றி பெற்றால் அண்ணா வெற்றிபெறுவார். ஆகவே கொள்கை காப்பாற்றப்பட கழகத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.
எனது ஆசை நீங்கள் நிகழ்த்திய சமீபகால நிகழ்ச்சி போன்று இனி தொடரா என்று சொல்லுவது அண்ணாவின் கழகத்தையும் கொள்கையையும் காப்பாற்றும் அவரது தம்பிகளில் ஒருவராக உங்களை மீண்டும் நிரூபிக்கிறீர்கள் என்று ஆகும்.
எனவே, எதிரிகள் தூற்றுவார்கள் என்றோ, கேலி பேசுவார்கள் என்றோ, பணம் திரு எஸ்.எஸ்.ஆர்.இன் வாயை அடைத்துவிட்டது என்று பேசுவார்கள் என்றோ கவலைப்படத் தேவை இல்லை. இதுவரையில் மாற்றார்கள் நம் மீது சுமத்தாத பழியை, சொல்லாத குற்றச்சாட்டை புதிதாக சுமத்தப் போகிறார்களா? நான் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். அதையே மீண்டும் சொல்லிக் கொள்கிறேன்.
கழகத்தைக் காப்பதன் மூலம் கொள்கையைக் காப்போம். கொள்கை காப்பாற்றப்பட்டால் நமது வாழ்க்கையின் குறிக்கோளை அடைவோம். சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

