திரவ கான்கிரீட் போல அப்படியே உறைந்த வெள்ளம்.. நொடியில் கொன்ற பனிப்பாறை.. நேபாள கொடூரம்! | Liquid Concrete Flood: How a 1.2 Km Glacier Plunge Caused Massive Destruction in Nepal

Spread the love

International

oi-Shyamsundar I

காத்மண்டு: நேபாளத்தின் ரசுவா பகுதி மற்றும் நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளில் சமீபத்தில் திடீரெனப் பாய்ந்த வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் தொடங்கிய ஒரு நிகழ்வு, மிகப்பெரிய இயற்கை அழிவாக மாறியுள்ளது.

தொடக்கத்தில் நிலநடுக்கத்தால் இது நடந்திருக்கலாம் என்று பேசப்பட்டது. ஆனால், செயற்கைக்கோள் படங்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஆய்வுகள் மூலம், மலையில் இருந்த ஒரு பெரிய பனிப்பாறை உடைந்து விழுந்ததே இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

Nepal

1.2 கிலோமீட்டர் பள்ளத்தில் விழுந்த பனிப்பாறை

சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த ஒரு பெரிய பனிப்பாறையின் பெரும்பகுதி திடீரென உடைந்தது. கனடா பல்கலைக்கழக ஆய்வாளர் டேனியல் சுகர் தகவலின்படி, சுமார் 200 சதுர மீட்டர் அளவிலான பனிப்பாறை உடைந்து, கீழே இருந்த பள்ளத்தாக்கில் சுமார் 1.2 கிலோமீட்டர் ஆழத்துக்கு செங்குத்தாக விழுந்துள்ளது.

அவ்வளவு உயரத்தில் இருந்து பனிப்பாறை கீழே விழுந்ததால், அது ஒரே பாறையாக இல்லாமல் சுக்குநூறாக உடைந்து சிதறியது. மலையிலிருந்து மிக வேகமாக உருண்டு வந்த அந்தப் பனிக்கட்டிகள், வழியில் இருந்த தளர்வான மணல், பாறைகள் மற்றும் மண்ணையும் தன்னுடனே சேர்த்து இழுத்துக் கொண்டு பாய்ந்தது.

‘கான்கிரீட் கலவை’ போல் மாறிய வெள்ள நீர்

வெறும் பனிக்கட்டியாகத் தொடங்கிய சரிவு, கீழே வர வர பாறைகள், மணல், மரங்கள் மற்றும் மண்ணோடு கலந்து பெரும் சேற்று வெள்ளமாக மாறியது.

சாதாரண வெள்ளத்தில் தண்ணீர் மட்டுமே அதிகமாக ஓடும். ஆனால், இந்த வெள்ளத்தில் தண்ணீர், மண், பெரிய பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் ஒன்றாகக் கலந்து மிகவும் அடர்த்தியாக மாறியது. அமெரிக்க ஆய்வாளர் ஹதீம் ஷெரீப் இதை, கட்டடம் கட்டப் பயன்படுத்தும் ‘ஈரமான கான்கிரீட் கலவை’ போன்றது என்று கூறியுள்ளார். இந்த அடர்த்தியான வெள்ளம் கண் இமைக்கும் நேரத்தில் வழியில் இருந்த வீடுகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் பெரிய பாறைகளையும் அடியோடு அடித்துச் சென்றுவிட்டது.

செயற்கைக்கோள் படங்கள் காட்டும் உண்மை

இந்தியாவின் இஸ்ரோ மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள் படங்கள் இந்த நிகழ்வை உறுதி செய்துள்ளன:

ஆகஸ்ட் 24 அன்று எடுக்கப்பட்ட சென்டினல்-2 படத்தில் அந்த பனிப்பாறை எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக இருந்தது.

ஆனால், விபத்து நடந்த பிறகு ஆகஸ்ட் 26 அன்று எடுக்கப்பட்ட லேண்ட்சாட்-9 படத்தில், பனிப்பாறை உடைந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் மட்டுமே தெரிந்தது.

இந்த பனிப்பாறை மலையிலிருந்து விழுந்த வேகம் மற்றும் அதிர்வு, நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளிலேயே பதிவாகியுள்ளது.

எப்படி இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டது?

பனிப்பாறை உடைந்து விழுந்ததும், அதனுடன் வந்த பாறைகளும் மண்ணும் ஆற்றுப் பாதையை தற்காலிகமாக அடைத்தன. சிறிது நேரத்தில் தண்ணீர் அதிகமாகச் சேர்ந்து அந்த அடைப்பு உடைந்ததால், தேங்கியிருந்த நீர் அசுர வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது. இதன் காரணமாகவே திரிசூலி ஆற்றுப் பகுதியில் இருந்த ஊர்களும் பாலங்களும் சில நிமிடங்களிலேயே முற்றிலும் அழிந்துபோயின.

இமயமலைப் பகுதியில் புவி வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதும், இதுபோன்ற கடுமையான இயற்கை ஆபத்துகள் தொடர்ந்து அதிகரிப்பதும் மக்களிடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *