ஆட்சியைப் பிடித்த பிறகு கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தவெகவின் அடுத்த மாநாட்டைத் திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திருச்சியா, திருநெல்வேலியா என்ற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், திருச்சிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியென்ன திருச்சியின் மீது விஜய்க்கு ஸ்பெஷல் கவனம்? அடுத்த தேர்தல்களுக்கு இப்போதே களத்தைத் தயார்படுத்துகிறாரா? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
இடைத்தேர்தல்… உள்ளாட்சித் தேர்தல்! விஜய்க்கு முன் நிற்கும் சவால்கள்!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தகட்டத் தேர்தல்களிலும் தனது கட்சியின் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய சூழலில் தவெக இருக்கிறது. விராலிமலை, திருச்சி கிழக்கு, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், கட்சியின் தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவை உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டுமானால், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தியாக வேண்டும். நிர்வாகிகள் நியமனம், தொண்டர்களை ஒருங்கிணைத்தல், தொகுதி வாரியான தேர்தல் பணிகள் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்தப் பின்னணியில், மாநாட்டின் மூலம் கட்சியினருக்கு உற்சாகம் அளிப்பதுடன், அடுத்தடுத்த தேர்தல்களுக்கான அரசியல் வியூகங்களை வகுக்கவும் விஜய் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
திருச்சியைத் தேர்வு செய்ய இதுதான் காரணமா?
திருச்சி மாவட்ட அரசியல் கணக்குகள்தான் மாநாட்டுக்கான இடத் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், அப்பகுதியில் பெரிய அளவிலான மாநாட்டை நடத்துவது கட்சிக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
மேலும், திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்சியின் தேர்தல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் இந்த இடம் உதவக்கூடும். அம்பாசமுத்திரம், பெருந்துறை உள்ளிட்ட மற்ற தொகுதிகளிலும் வெற்றிக்கான களப்பணிகளைத் திட்டமிட வேண்டியிருக்கும்.
அதனால், மாநாடு நடத்தப்படும் இடம் என்பது வெறும் ஏற்பாட்டு முடிவாக இல்லாமல், தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாநாடு நடைபெறும் இடம், தேதி உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
விக்கிரவாண்டி முதல் மதுரை வரை… அடுத்தது திருச்சியா?
தவெக தொடங்கப்பட்ட பிறகு விஜய் நடத்திய மாநில அளவிலான மாநாடுகள், கட்சியின் அரசியல் பயணத்தில் முக்கியத் திருப்பங்களாக அமைந்தன.
கடந்த 2024 அக்டோபர் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில், கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் விரிவாக எடுத்துரைத்தார். சமூக நீதி, மதச்சார்பின்மை, சமத்துவம் உள்ளிட்ட கொள்கைகளை முன்வைத்து தனது அரசியல் பாதையைத் தொண்டர்களிடம் விளக்கினார்.
அதைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 21-ம் தேதி மதுரையில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில், திமுக மற்றும் பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய், எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரையும் குறிப்பிட்டுப் பேசினார். இந்த மாநாடு கட்சியின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியது.
இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் அடுத்த மாநாடு, முந்தைய மாநாடுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை கொள்கைகளையும் அரசியல் எதிர்ப்புகளையும் முன்னிறுத்திப் பேசிய விஜய், இனி அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கும்.
எதிர்க்கட்சிகளுக்கு பதிலா… தொண்டர்களுக்கு புதிய அசைன்மென்ட்டா?
மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்பதுதான் இப்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வி. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா? அல்லது அடுத்தடுத்த தேர்தல்களை மையமாக வைத்து கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பிப்பாரா?
ஆட்சியில் இருப்பதால், கட்சியின் அரசியல் முழக்கங்களுடன் நிர்வாகப் பொறுப்புகளையும் இணைத்துப் பேச வேண்டிய சூழல் விஜய்க்கு உள்ளது. மக்களின் குறைகளை எப்படிக் கையாள்வது, உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற விஷயங்களும் முக்கியத்துவம் பெறலாம்.
அதேபோல், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் கட்சியின் பலம், நிர்வாகிகளின் செயல்பாடு, தேர்தல் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு ஆகியவற்றையும் தலைமை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.
மொத்தத்தில், திருச்சியில் மாநாடு நடத்தும் திட்டம் உறுதியானால், அது தவெகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்துக்கான முக்கிய அறிவிப்பாக அமையலாம். தேர்தல் வெற்றிகளைக் கடந்து, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி ஆட்சியையும் அரசியலையும் ஒருசேர முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டத்தில் விஜய் இருக்கிறார். மாநாட்டின் இடம், தேதி, நிகழ்ச்சி நிரல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே அடுத்த நகர்வுகள் என்ன என்பது தெளிவாகும்.

