இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எஃப்.பி.ஓ-வை சேர்ந்த விவசாயிகள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள்:
“1. உற்பத்தி சரியாக செய்தாலும் சந்தைப்படுத்துதலில் பிரச்னை உள்ளது. விவசாயிகள் நேரடியாக உற்பத்தி பொருள்களை இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்துவதுதான் நமது நோக்கம். அதன் ஒரு முன்னெடுப்பாக அரசு நிலத்தில் குறைந்தபட்ச நிலமாவது கொடுத்து எங்களுடைய கடைகளை வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
2. தொடர் மின் கட்ட உயர்வால் ஆலை வைத்திருக்கும் எஃப்.பி.ஓ விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாதம் மின் கட்டணத்திற்கு மட்டுமே 18,000 முதல் 20,000 வரை செலவாகிறது. எனவே மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் அல்லது சூரிய மின்தகடு அமைத்து தரவேண்டும்.
3. நபார்டு வங்கி போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு கடனாக நிதி உதவி வழங்குகின்றனர். ஆனால் அது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான். அதன் பின் எங்களுடைய வருமானத்தை வைத்து தான் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும். கூடுதலாக மூன்றாண்டுகள் கொடுத்த கடனையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். சந்தைப்படுத்துதலும் சரியான வியாபாரமும் இல்லாததால் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு(CEO) ஊதியம் கொடுக்க முடியவில்லை. இதனால் நிறைய எஃப்.பி.ஓ-க்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரி இல்லாமல் இருக்கிறது. இது நிறுவனத்தின் மீதான மேற்பார்வையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
4. நபார்டு போன்ற நிறுவனங்களில் கடன் வாங்கி கட்ட முடியாத பட்சத்தில் எங்கள் மீது உரிமையியல் வழக்கு போடலாம். ஆனால் குற்றவியல் வழக்குகளை (செக் பவுன்ஸ் வழக்கு) பதிவு செய்கின்றனர்.
இது மிகவும் மன உளைச்சலையும் கூடுதலான நிதி நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. 75 வயது எஃப்.பி.ஓ விவசாயி மீது செக் பவுன்ஸ் வழக்கு போடப்பட்டு அவர் வாரம் இரு முறை சென்னை நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியதாக இருக்கிறது. நபார்டு இது போன்ற வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்வார்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கி இருக்க மாட்டோம்.
நபார்டு எங்கள் மேல் உரிமையியல் வழக்கு கூட தொடுக்கட்டும் ஏனென்றால் எங்களால் கடனை திருப்பி கட்ட இயலவில்லை. இதற்கு சந்தைப்படுத்துதலில் இருக்கும் சிக்கலே முதல் காரணம். ஆனால் நபார்டு குற்றவியல் வழக்குகளை மனசாட்சி இன்றி எங்கள் மேல் பதிவு செய்யாமல் தடுக்க வேண்டும்.”
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத எஃப்.பி.ஓ-க்களை சேர்ந்தவர்கள் தங்களின் கோரிக்கைகளை படிவத்தில் எழுதி அனுப்பியுள்ளனர்.
“இந்த கோரிக்கைகளை எல்லாம் தொகுத்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என எஃப்.பி.ஓ இயக்குநர்கள் தெரிவித்தனர்.