திருச்சி: சுடுகாட்டில் கிடந்த மனித எலும்பு கூடு; பெட்ரோல் ஊற்றி எரிப்பா? – அதிர்ச்சி சம்பவம்!

Spread the love

​ திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், வால்மால் பாளையம் அருகே உள்ள கீழூர் கிராம சுடுகாட்டில் மனித உடல் ஒன்று முற்றிலும் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்ணச்சநல்லூர் போலீஸார் ஆய்வு செய்தபோது, உடல் முழுவதும் எரிந்த நிலையில் மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு மட்டுமே கிடந்தது. மேலும், தலைப்பகுதி இருந்த இடத்தில் எரிந்த நிலையில் சிறிய பாசிமாலை, அதன் அருகே சிவப்பு நிறச் சேலையின் எரிந்த துண்டுகள் மற்றும் ஒரு புதிய பச்சை மண்பானை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை வைத்து, எரிக்கப்பட்டவர் பெண்ணாக இருக்கலாம் என்றும், உடலை முழுமையாக எரிப்பதற்காகப் பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.​

இந்த உடல் எரிக்கப்பட்டு சுமார் இரண்டு நாள்கள் ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், வால்மால் பாளையம் மற்றும் கீழூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, சுடுகாட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள முச்சந்தி (மூன்று ரோடுகள் சந்திக்கும் பகுதி) பகுதியில் ஐந்து நபர்கள் நின்று கொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பார்த்ததாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இந்த ​சம்பவ இடத்தை ஜீயபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ​இறந்து கிடந்தவர் யார், அவர் வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டாரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்கள் இங்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துச் சென்றார்களா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனித எலும்பு கூடு கிடந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *