திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் கிறிஸ்தவ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜு (86) என்பவர் வயது மூப்பு காரணமாக கடந்த 17.07.2026 அன்று காலமானார்.
இவரது உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவ முறைப்படி கோயிலில் திருப்பலி நடத்தி, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஏ.டி.எஸ்.பி தனராசு, முசிறி டி.எஸ்.பி முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த முசிறி சப்-கலெக்டர் சுஸ்ரி சுவாங்கி குந்தியா தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில், ஒரு தரப்பினர் “கடந்த 2024-ல் நீதிமன்றத்தில் மனு செய்து உடல் அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம்’ என்றும், மற்றொரு தரப்பினர், ‘இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்றும் கூறினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் உடன்படாததால் நேற்று மாலை 5 மணி அளவில் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு தரப்பிலும் 5 பேர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி கோட்டாட்சியர் கூறிச்சென்றார். அதன்படி, முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரும் அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.