திருச்சி: மது அருந்த பணம் தராத மனைவி; குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்!

Spread the love

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது: 45). இவர், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சின்னம்மாள் (வயது:42) . இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் குடிப்பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால், வீட்டில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், வேலைக்கு சென்று விட்டு குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால், அவர் மது அருந்துவதற்கு பணம் கொடுப்பதற்கு மனைவி தர மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் இருந்த குக்கரின் மூடியால் தனது மனைவி சின்னம்மாளின் தலையில் தாக்கியுள்ளார்.

குக்கர் மூடியில் தாக்கியதால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார் சின்னம்மாள். இச்சம்பவம் பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீஸார் விசாரணை செய்தனர். இறந்த சின்னமாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்வதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் கணவர் அடித்து கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *