திருச்சி மாநகரம், டி.வி.எஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை பார் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பாக போக்குவரத்து நிறைந்த இந்தப் பகுதிகளில் அதிக அளவு விபத்து ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த டாஸ்மாக்கை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த பாரை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, போலீஸார் அவர்களைத் தடுத்ததால் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள்,
“இந்த டாஸ்மாக் பார் 24 மணி நேரமும் நான் ஸ்டாப்பாக இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் மதுவை அருந்திவிட்டு மதுப்பிரியர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறார்கள். குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவிகள் இந்தப் பகுதியை கடந்து போக அஞ்ச வேண்டிய சூழல்.
பெண்கள் இந்தப் பகுதியைக் கடக்க முடியவில்லை. மதுப்பிரியர்களால் எந்நேரமும் ஆபத்து வரக்கூடும் என்ற நிலையே உள்ளது. அதனால், உடனடியாக அந்தப் பாரை அங்கிருந்து அப்புறப்படுத்த வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.