திருச்சி: 'மூன்று இடங்கள்; திருடுபோன 110 சவரன் நகைகள்!' – அதிர்ச்சியில் திருவெறும்பூர் மக்கள்

Spread the love

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மரியன் ஸ்டீபன் ( 45 ). இவர், மணப்பாறை ஆவாரம்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கியம். இவர், மிலிட்டரி காலனி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்து முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபொழுது வீட்டின் பின்பக்கம் உள்ள மரக் கதவு நெம்பி உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். பின்னர், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்க நகை காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக இச்சபவம் குறித்து மரியன் ஸ்டீபன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், திருவெறும்பூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு உடனடியாக கைரேகை நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதேபோல், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சுங்கச்சாவடி பகுதியில் உள்ள அரணாபுரி நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கோவிந்தராஜ் (38) இவர் காரைக்காலில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு தமன் சங்கர், விபாகர்என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படை தொழிற்சாலை பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் பள்ளியில் கொண்டு விடுவதற்காக ரம்யா வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர், குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு துவாக்குடி பெல் நகரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கியுள்ளார். பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு மாடியில் உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் இருந்த 40 பவுன் நகை காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக இச்சம்பவம் குறித்து துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துவாக்குடி போலீஸார் உடனடியாக கைரேகை பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

trichy

அதன்பிறகு, சம்பவ இடத்திற்கு கைரேகை பிரிவு போலீஸாரும் வந்து குற்றவாளிகளின் கைரேகையை பதிவு செய்ததோடு இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல், பொன்மலைப்பட்டி ஐந்தாவது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் டேவிட் ( 53). இவர், தனது மனைவி புஷ்பா, மகள் ஜாஸ்மின், மகன் சிம்சன் கில்பர்ட் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கேரளாவிற்கு உறவினரின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது வீட்டிலிருந்த மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகவும் வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 38 பவுன் நகை காணாமல் போய் இருப்பதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக திருவெறும்பூர் போலீஸாருக்கு டேவிட் தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீஸார் உடனடியாக கைரேகை பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி, திருவெறும்பூர் காவல் உட்கோட்ட பகுதியில் 3 வீடுகளில் சுமார் 110 பவுனுக்கு மேல் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தையும், திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *