ஆம்… ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வடிவம் அல்லவா அவன். அவனைப் பொருத்தவரை தன்னோடு போர் புரிய வருவது ஒரு குழந்தை. சிறுவன். சிவனிடமே வரம் பெற்ற தன்னை அவன் சிறுவன் என்ன செய்ய முடியும் என்கிற தலைகணம்.
‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ என்றானே பாரதி… அதுவல்லவோ ஞானத்தின் உச்சம். கலியுகத்தில் அவன் அடைந்த ஞானத்தைக்கூட 27 சதுர்யுகங்கள் வாழ்ந்த சூரபத்மன் உணரவில்லையே… பெரும் தீ அல்லவா ஈசன்… பிரம்மனும் விஷ்ணுவும் அடிமுடி காண முடியாதபடி அக்னித் தூணாக எழுந்து நின்றவர் அல்லவா ஈசன்… அவரே அல்லவா ஆறுமுகனாகவும் வந்து உதித்தார். இதை அறியமுடியுமா அகந்தையில் ஆட்டம்போடும் மாயையின் மைந்தனால்… யுத்தம் செய்ய வந்து நின்றான். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சூரனுக்கு சகல வரங்களையும் தந்தவர் அந்த ஈசன். வருபவன் சிறுவனாக இருக்கலாம். ஆனால் ஈசனின் மகனல்லவா… தனக்கு அருள் தந்த ஈசனின் மைந்தன் என்று வரவேற்று அடிபணிந்திருக்கலாம். நன்றி மறந்தான். போர்புரிய வந்து நின்றான். நன்றி மறந்தால் என்ன நடக்கும் என்பதை உலகுக்கு உணர்த்தவே சேனை கொண்டுவந்தான் அந்த சேவல்கொடியோன்.

முதலில் மாயாமலத்தின் அடையாளமான தாரகன் வந்து நிற்கிறான். உலக மாயைகளின் ஒட்டுமொத்த வடிவம் அவன். மாயைதான் நம்மை இந்த உலகத்தின் இன்பங்களில் சிக்கித் தவிக்க வைக்கிறது. பாசத்தில் பதற வைக்கிறது. ஆசையில் அலற வைக்கிறது. மாயை ஒரு திரை. அதில் மனத்தின் விருப்பங்கள் எல்லாம் ஒரு திரைப்படம் போல் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதையே உண்மை என்று எண்ணி நம்பி் நாம் மயங்கிக் கிடக்கிறோம். ஆனால் அவை நிழல். மனத்தின் நிழல். முருகப்பெருமானின் வேலே அந்த மாயைத் திரையைக் கிழிக்கும் வல்லமை கொண்டது.
அதன்படியே தாரகனை வேல் இருகூறாக்கிப் போட்டது. அசுரன் தன் பலத்தில் இல்லை… படையில் ஒன்றை இழந்தான். அடுத்து சிங்கமுகன் பிடறி சிலிர்க்க வருகிறான். அவன் கன்ம மலத்தின் வடிவம். மனம், மொழி, மெய்களின் விளைவுகளே கன்மம். எத்தனையோ தீமைகளை மனம் அசைபோடுகிறது. சில நேரங்களில அது வார்த்தைகளாய் வெளிப்படுகிறது. தன்னையும் அறியாமல் சிலவேளையில் உடலால் அதை அடைகிறது. ஒரு தீமை இந்தப் படிநிலையில் எங்கு தோன்றினாலும் அதற்கு உண்டாகும் பாவம் ஒன்றுதான்.
என்ன மனத்தால் நினைத்தாலும் மொழியால் வெளிபபடுத்தினாலும் உடலால் நிகழ்த்தினாலும் அதே பாவம்தானா… ஆம் என்கின்றன ஞானநூல்கள். அப்படிப் பிறவிதோறும் உண்டாகும் கன்மமலத்தை அழிக்காமல் நாம் அந்தப் பரமபொருளை தரிசிக்க முடியாது.