முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா.
ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது.

தினமும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி தங்கச்சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். ஆறாவது நாள் திருக்கோயில் கடற்கரையில் மாலை 4 மணிக்கு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதில் கலந்து கொள்ள சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் 6 நாட்களில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.