திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா (46). இவர் சினிமா தியேட்டரில் வேலை செய்து வந்தார. இவரின் மனைவி துர்கா இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ளனர். ராஜாவின் ஒரு மகளுக்கு 17 வயதாகுகிறது. அவர் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.
அவரை சிறுவன் ஒருவன், ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து ராஜாவின் 17 வயது மகளுக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததாகக் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ராஜாவின் மனைவி துர்கா, சில தினங்களுக்கு முன்பு திருத்தணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி சிறுவனின் லவ் டார்ச்சருக்கு உடந்தையாக இருந்த லாரன்ஸ் என்பவரைக் கைது செய்தனர்.

இந்தநிலையில் ராஜா, தன்னுடைய வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தபோது பைக்கில் முகமுடி அணிந்து வந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பிச் சென்றது. ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது ராஜா, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இதையடுத்து திருத்தணி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட ராஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராஜாவின் உறவினர்கள் போலீஸாரை சரமாரியாக குற்றம் சாட்டினர். புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது என்று கூறினர். அதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.