ஜனநாயக நாட்டில், அம்பேத்கர், பெரியாரைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்ட ஒரு அரசின் கீழ் மத நல்லிணக்கதை பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பப்பட்ட ஆவணப்படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டது அரசியல் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “சமகாலத்தில் மதநல்லிணக்கத்திற்கு வந்த அச்சுறுத்தலையொட்டி ஊடகவியலாளர் ‘அறக்கலகம்’ தவம் அவர்கள் திரு. தமிழ்தாசன் அவர்களோடு இணைந்து தயாரித்து இயக்கிய மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் “திருப்பரங்குன்றம் Files” என்ற ஆவணப்படத்தை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஃபோர் பிரேம்ஸ் அரங்கில் வெளியிட்டு, திரையிடல் நிகழ்வுகளும் நடைபெற்றது. அப்போது மூத்த ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து இன்னும் சில திரையிடல்களும் நடைபெற்றன.
அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட அந்த திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத்தை புதுக்கோட்டையில் இன்று (31 மே) திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் வீதி கலை இலக்கியக் களம் அமைப்பினர். ஆனால், நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தனியார் அரங்கத்துக்கு வந்த காவல்துறையினர் அதை நடத்தக் கூடாது எனத் தடுத்துள்ளனர். அரங்க உரிமையாளர்களுக்கு தொந்தரவு வேண்டாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கத்திற்கு நிகழ்வை மாற்றியும் உள்ளனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் திரையிடல் ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் திடீரென அங்கும் காவல்துறையினர் வந்துள்ளனர். ‘திரையிடக் கூடாது…மேலிட உத்தரவு’ என்று கூறி நிகழ்ச்சியை தடுத்துள்ளனர்.