உங்கள் விஷயத்தில் குழந்தையின்மைக்கான பிற காரணங்களையும் ஆராய வேண்டும். ஏஎம்ஹெச் (AMH) எனப்படும் ‘ஆன்டிமுலேரியன் ஹார்மோன்’ அளவுகளைப் பார்க்க வேண்டும். அதில் உங்களுடைய கருத்தரிக்கும் திறனைத் தெரிந்துகொள்ள முடியும். வயதாக, ஆக கருத்தரிக்கும் திறன் குறையும் என்றாலும் 30 வயதில் அது பெரிய அளவில் குறையாது. எனவே, மருத்துவரைக் கலந்தாலோசிப்பது சிறந்தது.
சமீப நாள்களில் உங்களுக்கு உடல் பருமன் அதிகரித்தது, சிகரெட், போதை மருந்துப் பழக்கம் போன்ற பழக்கங்களுக்கு உள்ளானது என ஏதேனும் நடந்திருந்தாலும், அவையும் கருத்தரிக்கும் திறனை பாதிக்கும். பால்வினை நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, அடிவயிற்றில் வலி, வெள்ளைப்படுதல், கருக்குழாய் அடைப்பு போன்றவை இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். அடுத்து உங்கள் கணவரின் வயது, அவரது உடல்நலம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும். அவருக்கு விந்தணுப் பரிசோதனை செய்ய வேண்டும்.

முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து மேற்குறிப்பிட்ட தழும்பு இருக்கிறதா, நார்மலாக இருக்கிறதா என்று பாருங்கள். ‘டியூபல் பேட்டன்சி டெஸ்ட்’ (Tubal Patency Test) எனப்படும் ஹெச்.எஸ்.ஜி டெஸ்ட் மூலம் கருக்குழாய்களில் அடைப்பிருக்கிறதா என கண்டறியலாம். எல்லா டெஸ்ட்டுகளும் நார்மல் என்றால் பயப்பட வேண்டாம். அதே நேரம் முந்தைய அபார்ஷனின் விளைவால்தான் கருத்தரிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்காமல், உடனடி மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் தொடங்கப்பட வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் இனியும் தாமதம் செய்ய வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.