திருமணத்தை மீறிய உறவு…வசமாக சிக்கிய Nvidia CEO…பதவிக்கு ஆப்பு வைத்த நிர்வாகக் குழு? – Kumudam

Spread the love

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான Nvidia தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங்கை, திருமணத்தை மீறிய இரண்டு உறவுகள் தொடர்பான சர்ச்சையின் காரணமாகப் பதவியிலிருந்து நீக்க அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு உறவு சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் விதிகளை மீறியது மற்றும் தனிப்பட்ட உறவுகள் குறித்து விவாதிக்க Nvidia நிர்வாகக் குழு அவசரமாகக் கூடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, Nvidia நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த கிம்பர்லி பவல் (Kimberly Powell) என்பவருடன் ஜென்சன் ஹுவாங் உறவில் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இது குறித்து ஜென்சன் ஹுவாங்கிடம் கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்து இணைப்பைத் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சீன நிறுவனங்களுக்கு Nvidia சிப்களை அனுப்புவதில் உதவியதாக அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சனுக்கு இருந்த நெருக்கமான தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானதிலிருந்தே இந்தச் சர்ச்சை தொடங்கியது.

இது குறித்து கடந்த 8 ஆம் தேதி ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பில், தனது மனைவிக்குத் துரோகம் செய்ததை ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், அதற்கு முழுப் பொறுப்பேற்பதாகக் கூறியிருந்தார். அதே நாளில், வெளிநாட்டு உளவு அமைப்புகளால் அவர் குறிவைக்கப்பட்டாரா என்பது குறித்து சுயாதீன இயக்குநர்கள் மூலம் Nvidia நிர்வாகக் குழு விசாரணையைத் தொடங்கியது. மேலும், இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு முன்பும் அவர் விளக்கமளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

1993-ஆம் ஆண்டு Nvidia நிறுவனத்தை இணைந்து தொடங்கிய ஜென்சன் ஹுவாங், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தை சுமார் 4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஏஐ (AI) சிப் சந்தையின் முன்னணி நிறுவனமாக வளர்த்தெடுத்தார். தற்போது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அடுத்தகட்ட தலைமைக்கான திட்டம் இல்லாததால் நிறுவனத்தில் பெரிய வெற்றிடம் ஏற்படும் எனத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வாரம் விசாரணை அறிவிக்கப்பட்டதிலிருந்தே Nvidia-வின் பங்கு மதிப்பு சுமார் 600 பில்லியன் டாலர் வரை சரிந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜென்சன் ஹுவாங்கை ஒரு கௌரவமான மனிதர் என்றும், நாட்டிற்காக அவர் சிறப்பான பணியைச் செய்துள்ளதாகவும் கூறித் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *