“தி.மு.க. பாதையிலா விஜய்? கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!” – Kumudam

Spread the love

கடந்த தி.மு.க. ஆட்சியில் துப்புரவுப் பணியைத் தனியார் மயமாக்குவதற்கு எதிராகவும், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் பெரியளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது தி.மு.க அரசு மேற்கொண்ட அடக்குமுறை அந்த ஆட்சியின் மீது மிகப்பெரிய கரும்புள்ளியாக விழுந்தது. இப்படியான சூழலில் அன்றைக்கு தங்கள் கோரிக்கையை ஆதரித்த த.வெ.க. தலைவர் விஜய், ஆட்சி அமைத்த பிறகு தி.மு.க. வழியிலேயே செல்வது நியாயமா என கொந்தளிக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வாவிடம் பேசினோம். “அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அரசுகள் செய்ததைப்போலவே துப்புரவுப் பணியை தனியார்மயமாக்க தற்போது, த.வெ.க. அரசும் முயற்சித்தது. ஆனால், பல தரப்பிலிருந்தும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அந்த முடிவிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இருந்தாலும் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் தூய்மைப் பணிகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் மட்டும்தான் அவை சுயஉதவிக் குழுக்கள் வசம் உள்ளன.

சென்னை மாநகராட்சியில்கூட 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்துத்தான் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடந்தது. தனியார் நிறுவனங்கள் தூய்மைப் பணியாளருக்கு 5 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரைதான் ஊதியம் தருகின்றன.

அதுவே அரசு அவர்களுக்கு பணி நிரந்தரம் அளிக்கும் நிலையில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலும் ஊதியம் கிடைப்பதோடு, வைப்புத்தொகையும் கிடைக்கும். பின்னுக்குத் தள்ளப்பட்ட சமூகங்களிலிருந்து இத்தொழில் செய்ய வருகிறவர்கள் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிவிடக் கூடாது. ஆகவேதான் தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்காமல் உள்ளாட்சி நிர்வாகங்களே வைத்துக்கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்கிறோம்.

தி.மு.க. ஆட்சியில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டபோது த.வெ.க. தலைவர் விஜய், ‘தூய்மைப் பணிதான் நாட்டின் முதுகெழும்பு என்று சொல்லி அந்த போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார். தேர்தல் பிரசாரத்தின்போதும், ‘த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்றார். அவர் ஆட்சியைக் கைப்பற்றியதும் நிச்சயம் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.முக. மற்றும் தி.மு.க அரசுகளைப்போலவே த.வெ.க. அரசும் தூய்மைப் பணியை தனியார்வசம் ஒப்படைக்க டெண்டர் கோரியது. எதிர்ப்புகள் கிளம்பியதும் அம்முடிவை கைவிட்டிருக்கிறது.

தனியார் நிறுவனங்களின் வசம் ஒப்படைக்கும் முடிவை அடியோடு எதுவும் கோராமல், மாநகராட்சி, விட்டுவிட்டு, இனிமேல் புதிய டெண்டர் நகராட்சி நிர்வாகங்களுக்குக் கீழ் தூய்மைப் பணியைக் கொண்டுவர வேண்டும். மேலும், தூய்மைப் பணியில் நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு வர வேண்டும். இப்பணிக்கான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள சானிடரி எஞ்சினியரிங் என்கிற படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். ஆக தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதே புதிய அரசு ஏற்படுத்தும் மாற்றமாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநிலத்பாரதி
தலைவர் வழக்கறிஞர் கு.பாரதியிடம் பேசினோம். “மாற்றம், மாற்றம் என சொல்லிக்கொண்டு வந்த த.வெ.க., எந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது? அதி.மு.க. தி.மு.க. அரசுகளைவிட மிக வேகமாக ஆட்சிக்கு வந்து 40 நாள்களிலேயே தூய்மைப்பணியைத் தனியார்வசம் ஒப்படைக்க டெண்டர் கோரியிருப்பதுதான் மாற்றமா? இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகு அம்முடிவை பின்வாங்கியிருக்கும் இந்த அரசுக்குத் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் என்னவென்று தெரியாதா? அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கும் மேல் ஒப்பந்த ஊழியராக இருப்பவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படும் என்கிற வாக்குறுதியை அடியோடு மறந்துவிட்டார்கள்.

தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையும், தொழிலாளர்களுக்கான உரிமைகளும் வழங்கப்படுகிறதா என்றால் இல்லவே இல்லை. தமிழ்நாட்டில் 2 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாணை 62ன் படி வழங்கவேண்டிய குறைந்தபட்ச ஊதியத்திலிருந்து 6 முதல் 10 ஆயிரம் வரையிலும் குறைத்துதான் வழங்கப்படுகிறது. மேலும், தூய்மைப் பணியில் பெண்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கென கழிப்பறை வசதி கிடையாது. வார விடுமுறை, பண்டிகை முகக்கவசம், கையுறை, துடைப்பம்கூட வழங்கப்படுவதில்லை.

இப்பணியில் ஈடுபடுத்தப்படு கிறவர்கள் எல்லோரும் அருந்ததியர்கள், ஆதிதிராவிடர்கள் என பெரும்பாலும் யிருக்க இவர்களுக்கான உரிமைகளை த.வெ.க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட நிகழ்வில் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு செருப்புகளை வெறும் கையால் எடுத்து அப்புறப்படுத்தக் கூறியிருக்கின்றனர். இது எப்படிப்பட்ட சாதிய வன்முறை.

இதற்கு எதிராக நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளோம். பெரியார், அம்பேத்கரை தங்களது கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று சொல்லி சமூகநீதி பேசுகிற இந்த அரசு தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்கிறார்.

தூய்மைப் பணியாளர்களின் துயர் போக்குவாரா முதல்வர் விஜய்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *