துணியால் திருக்குறள் நூல் தயாரித்த கரூர் நெசவாளர்; இரா. பிரபுவின் வியக்க வைக்கும் படைப்பு | Karur Weaver Creates Thirukkural Book Using Fabric: R. Prabhu’s Amazing Work

Spread the love

நாம் சமீபத்தில் “ஹபீபி’ திரைப்படம் பார்த்திருப்போம் . அதில் நவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் தறிக்கூடம் இடிக்கப்படும் காட்சியை விவரித்திருப்பார்கள்.

அதுதான் பெரும்பாலான நெசவாளர்களின் இன்றைய நிலை. ஆனால் பழமை மாறாமல் 4 -வது தலைமுறையாக தறியில் நெசவு நெய்து வரும் கரூர் எலவனூரைச் சேர்ந்த இரா. பிரபு, திருக்குறள் முழுமையையும் துணியால் தயாரித்து வியக்க வைத்துள்ளார்.

சுமார் 8 கிலோ எடையில், ரூ. 25,000 செலவில் இதை தயாரித்துள்ளார் . துணியை நெய்து, மாடர்ன் பிரிண்ட் இல்லாமல் அதில் பழமையான முறையில் துணி மேல் அச்சுப் பதித்துள்ளார்.

இரா.பிரபு

இரா.பிரபு

நெசவுத் தொழிலை நவீன யுக்திகள் புகுத்திக் காக்க வேண்டும் என்பதற்காகவும் , தமிழின் தொன்மையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதைச் செய்ததாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து கரூரைச் சேர்ந்த நெசவாளர் இரா. பிரபு கூறுகையில், ” நெசவுத் தொழிலில் இருந்து பல இளைஞர்கள் வெளியேறியதற்கு முக்கியக் காரணம் பொருளாதாரம் அல்ல. கூலி வேலைக்குச் செல்பவருக்கு பெண் கிடைத்தாலும் நெசவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு பெண் கிடைப்பதில்லை என்பதால் தான். நெசவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, ‘ எங்கே நம்ம புள்ளயும் அங்கே தறியில் கிடந்து கஷ்டப்படுமே ‘ என்று நினைக்கிறார்கள்.

திருக்குறள் நூல்

திருக்குறள் நூல்

இந்த நிலை மாற வேண்டும். எனவே, என்னுடைய தனித்திறமையின் மூலம் தொழிலில் புதுமையைப் புகுத்த வேண்டும் என விரும்பினேன்.

அதே வேளையில் நம் தமிழின் பெருமையையும் இன்றைய இளைஞர்களுக்கு வித்தியாசமான முறையில் உணர்த்த வேண்டும் என நினைத்தேன். முதலில் என் மகள் தன் கைகளால் வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தை துணியால் நெய்து , அப்போதைய கரூர் கலெக்டர் , அப்போதைய அமைச்சர்களான திரு.செந்தில் பாலாஜி, திரு.மதிவேந்தன், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. திரு.இளங்கோ ஆகியோருக்கு நினைவுப் பரிசாக வழங்கினேன். இது இன்றைக்கும் கலெக்டர் ஆபீஸ் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இரா.பிரபு

இரா.பிரபு

பிறகு, நம் தமிழின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றும் திருக்குறளை முழுவதுமாக துணியால் உருவாக்க முடிவு செய்து, 4 மாதகால கடின உழைப்பால் நிறைவு செய்தேன். இதை ‘ Nobel World Records ‘ அங்கீகரித்துள்ளது.

இதற்கான சான்றிதழை பால் வளத்துறை அமைச்சர் திருமதி. சி.விஜயலட்சுமி அவர்களிடம் பெற்றேன். மொத்தமாக 10 புத்தகங்கள் உருவாக்கியுள்ளேன். இதை‌ முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர், பெரிய நூலகங்களுக்கு தர வேண்டும் என்பது விருப்பம் . சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ‘ வீ தி லீடர்ஸ் ‘ அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற 7 விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசாக நான் நெய்த அப்துல் கலாம் ஓவியம் வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி.

இந்தியாவில் அதிக பொருளாதாரம் ஈட்டக் கூடிய துறை இதுதான். இளைஞர்களுக்கு பயிற்சிகளைக் கொடுத்தால் இந்த தொழிலைக் காப்பாற்ற முடியும். என் உயிர் போகும் வரை தறிக் கூடத்தில் தான் நெசவு செய்வேன். Amazon , Flipkart போல அரசே ஒரு தளத்தை உருவாக்கி E- Commerce முறையில் நெசவுத் துறையை மேம்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *