மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன?
இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா?

ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.