பிரபல நடிகரும் சர்வதேசத் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளருமான ரவீந்திரனை, மாநிலத் திரைப்பட அகாடமியின் புதிய தலைவராக கேரள அரசு நியமித்துள்ளது. 1980-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் ரவீந்திரன். 1980-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு தலை ராகம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தனது தனித்துவமான நடன அசைவுகளால் “டிஸ்கோ ரவீந்திரன்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட இவர், பின்னர் திரைத்துறை சார்ந்த ஆய்வுகள் மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். இது குறித்து ரவீந்திரன் கூறுகையில், “பப்பயுடே சொந்தம் அப்பூஸ் திரைப்படத்திற்குப் பிறகு, சினிமா துறையில் அடுத்தகட்டமாக வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தேன். சினிமா தொடர்பான கல்வியைப் பயிற்றுவிக்கத் தொடங்கினேன். பின்னர் திரைப்பட விழாக்களையே ஏன் நாம் பரவலாக நடத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அதன்படி, கல்லூரி வளாகங்கள் தோறும் நேரில் சென்று மாணவர்களுக்குத் தரமான உலகத் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டினோம். கேரளாவில் மட்டுமே சுமார் 250 கல்லூரிகளுக்குச் சென்று சினிமாக்களைத் திரையிட்டிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் தங்கி, அனைத்து வளைகுடா நாடுகளிலும் திரைப்பட விழாக்களை ஒருங்கிணைத்து நடத்தினேன். இதற்கிடையில், ‘இடுக்கி கோல்ட்’ போன்ற குறிப்பிட்ட சில திரைப்படங்களிலும் நடித்தேன்.

மாநிலத் திரைப்பட அகாடமியின் தலைவர் பதவியை எதிர்பார்த்தேன் என்பதை விட, அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று மனதார விரும்பினேன். திரைப்பட அகாடமி என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு களம். 2016-ம் ஆண்டுக்கு முன்பு அகாடமியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அப்போது காட்சி ஊடகக் கல்வி மற்றும் திரைப்பட எழுத்தறிவுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிலிம் மார்க்கெட் பொறுப்பாளராகவும் செயல்பட்டேன். அப்போது திரைப்படத்துறை சார்ந்த பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்த நினைத்திருந்தும், எதிர்பார்த்தபடி முழுமையாகச் செய்ய முடியவில்லை. அதனால் இப்பதவியை ஆவலுடன் எதிர்பார்த்தேன்.