தொடர் சிகிச்சையில் கொளத்தூர் எம்.எல்.ஏ! மருத்துவமனை சொன்ன குட் நியூஸ்! – Kumudam

Spread the love

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழுவின் தொடர் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி :

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

தொடர் கண்காணிப்பில் வி.எஸ்.பாபு :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.எம் ஹெல்த்கேர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு :

மேலும், வி.எஸ்.பாபுவின் உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், மருத்துவர்கள் வழங்கி வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்து, தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அரசியல் பின்னணி :

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வி.எஸ்.பாபு, அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவியேற்றார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களிலும், அவரது ஆதரவாளர்களிடையேயும் கவனத்தை பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *