International
oi-Nantha Kumar R
டெல்அவிவ்: ”துணை விமானி தொழுகை செய்ய அனுமதி கோட்டார். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் பின்னால் திரும்பாமல் முன்புறம் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை தாக்க தொடங்கினார். முதல் அடியிலேயே என்னுடைய பார்வை மங்கியது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இந்திய பைலட்டான கேப்டன் ஸ்மித் மச்சார் கூறினார்.

துபாய் – டெல்அவிவ் ‘ஃப்ளைதுபாய்’ விமானத்தில் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமியால் கத்திக்கத்து காயத்துக்கு ஆளான இந்திய பைலட் ஸ்மித் மச்சார் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய பைலட் ஸ்மித் மச்சாரிடம் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் பேசினார். அப்போது ஸ்மித் மச்சாரை ஹீரோ என்று அழைத்து நன்றி கூறினார். அதுமட்டுமின்றி வேகமாக குணமடைய வாழ்த்துகள் தெரிவித்ததோடு, இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த சமயத்தில் கடந்த 30ம் தேதி என்ன நடந்தது? எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது? என்பது பற்றி இந்திய விமானி ஸ்மித் மச்சார், நெதன்யாகுவிடம் கூறினார். இதுதொடர்பாக ஸ்மித் மச்சார் கூறியதாவது: ”துணை விமானி பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக நான் பின்னால் திரும்பாமல் முன்புறம் பார்த்து விமானத்தை இயக்கி கொண்டிருந்தேன்.
நான்கு அல்லது 5 நிமிடங்களுக்கு பிறகு என்னுடைய தலையின் பின்புறத்தில் பலமாக அடி விழுந்தது. விமானத்தில் ஏதோ பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்பதே என் முதல் எண்ணமாக இருந்தது. ஆனால் அதன்பிறகு, அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போதுதான் அது விமானத்தின் கோளாறு அல்ல. என்னுடன் காக்பிட்டில் (விமானி அறையில்) இருந்த துணை விமானி தான் தாக்குகிறார் என்பதை உணர்ந்தேன். திரும்பி பார்த்து அதனை உறுதி செய்தேன்.
துணை விமானியைத் தடுக்க முயன்றேன். ஆனால் தலையில் விழுந்த தாக்குதல்களால் என்னால் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. முதல் அடியிலேயே என்னுடைய பார்வை மங்கிப்போனது.
அடுத்ததாக, விமானம் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கி கொண்டிருந்தது. அதனை நான் உணர்ந்தேன். மக்கள் அலறிய சத்தம் கேட்டது. இதனால் காக்பிட் கதவை திறக்க முயன்றேன். முதல் முயற்சியை துணை விமானி தடுத்துவிட்டார். அப்போது என்னிடம் எஞ்சியிருந்த முழு போராட்ட உணர்வுடன் நான் செயல்பட்டேன். காக்பிட் கதவை எப்படியாவது திறக்க நினைத்தேன். அதனை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என நினைத்தேன்.
இதனை என்னுடைய தனிப்பட்ட போராட்டம் அல்லது மக்களுக்கான போராட்டம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அதனை நான் செய்தேன். முழு பலத்தையும் திரட்டி, கதவை நோக்கிப் பாய்ந்து அதை திறந்தேன்.
அதைச் செய்யாவிட்டால் நான் இறந்துவிடுவேன் என்று எனக்குத் தெரியும். எனவே என்னிடம் இருந்த முழு பலத்தையும் திரட்டி காக்பிட் கதவு வரை சென்று அதை திறந்தேன். அங்கு ரெடியாக இருந்த பயணிகள் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்பிறகு நடந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியுமே” என்றார்.