சென்னை அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரின் கணவர் தாமோதரன். சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தத் தம்பதியினருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் இறந்துவிட்டார். அதனால் மூதாட்டி பொன்னம்மாள், தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு பொன்னம்மாளுக்கு அவரின் மகள்களில் ஒருவர் போன் செய்திருக்கிறார். ஆனால் பொன்னம்மாள் போனை எடுக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த பொன்னம்மாளின் மகள், தனக்கு தெரிந்த ஒருவருக்கு போன் செய்து அம்மாவை பார்த்துவிட்டு வரும்படி கூறியிருக்கிறார். அதன்படி அந்த நபர், பொன்னம்மாள் வீட்டுக்குச் சென்ற போது அங்கு பொன்னம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நபர், பொன்னம்மாளின் மகளுக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து பொன்னம்மாளின் குடும்பத்தினர் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையத்து புதூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து பொன்னம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து புதூர் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட மூதாட்டி பொன்னம்மாளின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரின் முகம், கழுத்து பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. பொன்னம்மாளின் வீட்டிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மூதாட்டி பொன்னம்மாள், வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்தவர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் ஆட்டோ ஒன்று பொன்னம்மாள் வீடு பகுதியில் வந்து சென்ற காட்சிகள் பதிவாகியிருக்கிறது. அதனடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டி பொன்னம்மாள், நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அதை வைத்துப் பார்க்கும் போது தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களே இந்தச் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் கொலையாளிகளைப் பிடித்து விடுவோம்”‘ என்றனர்.