சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (42). இவரின் கணவர் சுப்பிரமணியன். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகலட்சுமி, ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரின் மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இரண்டாவது மகன் மதுரவாயலில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். நாகலட்சுமி, பிசினஸ் செய்து வரும் சூழலில் அவரின் கணவர் சுப்பிரமணியன் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில், மனைவி, குழந்தைகளைப் பிரிந்த சுப்பிரமணியன், மதுரையில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்த சுப்பிரமணியன், குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். சம்பவத்தன்று இரண்டாவது மகன், வீட்டுக்கு வந்த போது கதவில் ரத்தக்கறை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். மற்றொரு அறையில் சுப்பிரமணியன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காவல்துறைக்கு நாகலட்சுமியின் இரண்டாவது மகன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆதம்பாக்கம் போலீஸார் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாகலட்சுமியை சுப்பிரமணியன் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரியவந்தது.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீஸார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர். தன்னுடைய சேலை பிசினஸ் தொடர்பாக பல வீடியோக்களை அவர் பதிவிட்டு வந்தார். அதனால் நாகலட்சுமியின் இன்ஸ்டா பக்கத்தை ஏராளமானவர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இன்ஸ்டாவில் பிரபலமான நாகலட்சுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு கிடைத்ததும் விசாரணையை தொடங்கினோம். எங்களின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக இன்ஸ்டா பிரபலம் நாகலட்சுமியை அவரின் கணவரே கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்தக் கொலைக்கு பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த அரிவாளையும் சம்பவ இடத்திலிருந்தே பறிமுதல் செய்துள்ளோம். கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த கைரேகையிலும் சுப்பிரமணியனின் கைரேகை வீடு முழுவதும் பதிவாகியிருக்கிறது.

சம்பவத்தை முதலில் பார்த்த நாகலட்சுமியின் இரண்டாவது மகனிடம் விசாரித்தபோது அவர், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீண்ட நாள் பிரச்னை இருந்ததை தெரிவித்தார். இருப்பினும் கொலைக்கு என்ன காரணம் என விசாரித்து வருகிறோம். பிசினஸில் நாகலட்சுமிக்கு கடன் ஏற்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதுதொடர்பாகவும் விசாரித்து வருகிறோம். கொலை நடந்த இடம் அடுக்குமாடி குடியிருப்பு. அதனால் அங்குள்ள சி.சி.டி.வி-க்களை ஆய்வு செய்தபோது வெளிநபர்கள் யாரும் வரவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது”என்றனர்.