“ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத போதிலும்….”
செந்தில்பாலாஜியின் வியூகமும் பிரசாரமும் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இருக்கிறது திமுக அரசு கோவைக்கு செய்துள்ள திட்டங்கள். செம்மொழி பூங்கா, பெரியார் அறிவுலம், ஜிடி நாயுடு மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஹாக்கி மைதானம், தங்க நகை பூங்கா, பில்லூர் 3-ம் கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய தொழில் பூங்காக்கள்னு ஏராளமான திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வதுடன், “கடந்த முறை கோவையில் நாங்கள் பத்து தொகுதியில் ஒருதொகுதிகூட வெல்லாத போதிலும் கோவைக்கு சிறப்பு கவனம் எடுத்து முதலமைச்சரிடம் இவ்வளவு திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். கோவையில் நாங்கள் வென்றால், உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் மேம்படுத்த வருடத்துக்கு 5,000 கோடி ரூபாய் வீதம் 5 வருடத்தில் ரூ 25,000 கோடி அளவுக்கான நிதியை கொண்டு வந்து கோவையை ஹை-டெக்கான நகரமா மேம்படுத்தணும் என்பது என் கனவு” என்கிறார் செந்தில்பாலாஜி.

அத்துடன் நிறுத்திக்கொள்வதில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் வாக்கு கேட்டுச் செல்லும்போது அங்கிருக்கும் பிரச்னைகளை கவனமாகக் கேட்டுக்கொள்கிறார். எந்தப் பகுதியில் சாக்கடை பிரச்னை இருக்கிறது, எந்தப் பகுதியில் சாலை பிரச்னை இருக்கிறது. யாருக்கெல்லாம் பட்டா தேவை எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டு, மீண்டும் நம்ம ஆட்சி அமைந்ததும் நிச்சயமா பண்ணித் தர்றோம் என்று வாக்குறுதி கொடுக்கிறார். அதை நம்பும் மக்கள், `உங்களுக்குத்தான் எங்கள் ஓட்டு’ என்று உறுதியுடன் சொல்கிறார்கள். கோவையின் நம்பிக்கையாக செந்தில்பாலாஜியை பார்க்கிறார்கள்!