இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். ஆட்சியைப் பிடிக்க போராடிக்கொண்டிருந்தபோது எந்த காங்கிரஸ் கட்சி கை கொடுத்ததோ, அந்த காங்கிரஸ் கட்சியைக் கைவிட்டால்தான் நிம்மதியாக ஆட்சியைத் தொடர முடியும் எனும் நிலைக்கு த.வெ.க.வை பா.ஜ.க. தள்ளுவதாக வரும் தகவல்கள் விஜய் வட்டாரத்தைக் கலங்கடிக்கின்றன. சமீபத்தில் தென்மண்டல குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலமாக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சொல்லியனுப்பிய அந்த மெசேஜ்தான் பனையூர் வட்டார பரபர டாக்!
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க. சீனியர் ஒருவர், கடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகி தவெக. கூட்டணியில் இணைந்து ஷாக் கொடுத்தது காங்கிரஸ். கூடவே த.வெ.க. அமைச்சரவையிலும் பங்குபெற்றது காங்கிரஸ். இது தி.மு.க.வை எந்தளவுக்கு வெறுப்பு ஏற்றியிருக்குமோ, அதைவிட அதிகமாகவே பா.ஜ.க.வை வெறுப்பேற்றியிருக்கிறது.
ஓங்கும் காங்கிரஸ் கை!
கடந்த காலங்களில் தி.மு.க. கூட்டணியில் கொடுத்த இடங்களை வாங்கிக்கொண்டு பரிதாப நிலையில் அடக்கி வாசித்தது காங்கிரஸ். ஆனால், த.வெ.சு. கூட்டணியில் காங்கிரஸ் அப்படி இல்லை. தவெ.க, வளரும் கட்சி என்பதால், அதை பயன்படுத்திக்கொண்டு, டெல்லியைவிட தமிழகத்தில் அதிகம் தங்களை வலிமைப்படுத்திக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. அதற்கேற்ப த.வெ.க.வும் காங்கிரஸை நன்றாகவே குளிர்வித்துவருகிறது. அமைச்சரவையில் இரண்டு இடங்களை காங்கிரஸுக்கு வழங்கியதுடன், தங்களுக்கு கிடைத்த முதல் ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பைக்கூட காங்கிரஸுக்கு தாரை வார்த்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் வரை வழங்கும் மூடில் இருக்கிறது த.வெ.க உள்ளாட்சித் தேர்தலிலும் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில், ஐந்து மாநகர மேயர் பதவிகளாவது காங்கிரஸுக்கு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் சில பவர்ஃபுல் பதவிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸுக்கு கிடைக்கும் சூழல் நிலவுகிறது.
நேரம் பார்த்து காத்திருந்த பா.ஜ.க!
இப்படி அடுத்தடுத்து அதிகாரப் பதவிகளை கைப்பற்றி, தமிழகத்தில் வலுவான இடத்தை நோக்கி காங்கிரஸ் நகர்வதை பா.ஜ.க. ரசிக்கவில்லை. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் தமிழகத்திலிருந்து இரண்டு ராஜ்யசபா எம்.பிக்களை பெற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் தன் பலத்தை கூட்டியிருப்பதையும் பாஜகவால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இதனால் நேரம் பார்த்து த.வெ.க.வுக்கு பாடமெடுக்க காத்திருந்தது டெல்லி பா.ஜ.கூ அதற்கேற்ப, தென் மண்டல குழுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடந்தது. இதற்காக, ஆகஸ்ட் 19ம் தேதி இரவு சென்னை வந்த அமித் ஷாவை அரை மணி நேரம் காத்திருந்து, மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார் முதல்வர் விஜய். பிறகு அமித் ஷாவுக்கு ஸ்பெஷல் டின்னர் பாக்ஸ் ஒன்றையும் கொடுத்தார் விஜய். அதில் அமித் ஷாவுக்காக பிரத்யேகமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் இடம்பெற்றிருந்தன.
முன்னதாக, தென் மண்டலக் குழுவின் தலைவராக அமித் ஷா இருக்கையில், துணைத் தலைவராக விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே அவர் நேரில் சென்று அமித் ஷாவுக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும், இதன்பின்னால் ஆயிரம் அரசியல் காரணங்கள் ஒளிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு மோடி சொன்ன மெசேஜ்!
அன்று அமித் ஷாவை சந்தித்த போது, தயக்கத்துடனேயே விஜய் அவர் அருகில் அமர்ந்திருக்கிறார். அரசு நிர்வாகம் குறித்து அமித் ஷா கேட்ட சில கேள்விகளுக்கு ஒற்றை வரியில் பதில் அளித்திருக்கிறார் விஜய் பிறகுதான் அமித் ஷா மெல்ல தனது அரசியல் பேச்சை ஆரம்பித்தார் என்கிறார்கள். ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம். ஆனால், தமிழகத்தில் மாறி மாறி காங்கிரஸை தோளில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். இது ஏன் என தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தார். ஆனால், பா.ஜ.க.வுடன் அரசியல் கூட்டணி வைக்கவில்லை. அதை அவர் பல சூழல்களில் தெளிவுபடுத்தியும் இருக்கிறார்.
எனவே, நீங்களும் எங்களுடன் தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயத்தில் காங்கிரஸை மட்டும் கண்டுகொள்ள வேண்டாம். கூட்டணியில் இருந்து தள்ளி வையுங்கள். உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்கிறோம். காங்கிரஸுடன் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அது உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும். நீங்கள் எங்கள் நண்பனா, எதிரியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’ என பிரதமர் மோடி தரப்பிலிருந்து சொல்லப்பட்டதை அமித் ஷா ஷேர் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
என்னவாகும் அரசியல் எதிர்காலம்?
இப்படியாக முடிந்த அந்த சந்திப்பிற்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய விஜய் எதுவும் பேசவில்லை. அமைதியாக வீடு போய் சேர்ந்திருக்கிறார். பிறகு விஜய்யின் நலம் விரும்பிகள், கரூர் வழக்கு பற்றி அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. நடத்திவரும் விசாரணையின் முடிவு எதுவாக வேண்டுமானாலும் அமையலாம்.
ஒருவேளை விசாரணையின் முடிவில் முதல் குற்றவாளியாக, விஜய் சேர்க்கப்பட்டால் என்ன ஆகும் என்று கவலை தெரிவித்திருக்கிறார்கள் அவரின் நலம்விரும்பிகள், இன்னொருபக்கம் கட்சியைக் பா.ஜ.சு.வை காப்பாற்றிக்கொள்ள நெருங்கிக்கொண்டிருக்கிறது திமுக. இதனால்தான் மத்திய அமைச்சரவையில் செய்யப்படவுள்ள மாற்றங்களில்கூட சுணக்கம் தெரிவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை தி.மு.க பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் அது வேறு ரூட்டில் சென்று நிச்சயம் தனக்கு எதிராக திரும்பும் என நினைக்கிறார் முதல்வர் விஜய்
துருப்புச்சீட்டாக இடைத்தேர்தல்!
எனவே பேசாமல், டெல்லி மேலிட பா.ஜ.க.வின் முடிவை ஏற்றுக்கொள்ளலாமா என்றுகூட யோசனையில் ஆழ்ந்திருக்கிறது பனையூர் வட்டாரம். அதேசமயத்தில் காங்கிரஸை எப்படி கழற்றிவிடலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்றெல்லாம் காங்கிரஸை உதற முடியாது. அப்படி செய்தால் அது த.வெ.கவின் இமேஜை கண்டிப்பாக டேமேஜ் ஆக்கிவிடும் என்பது விஜய்யின் மனக்கணக்கு.
எனவே தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் எப்படி தானாக வெளியேறியதோ, அதுபோல் த.வெ.க. கூட்டணியிலிருந்தும் காங்கிரஸ் வெளியேறினால் நல்லது என்று நினைக்கிறது த.வெ.க. தலைமை. ஒருவேளை காங்கிரஸ் வெளியேறுவதால், ஆட்சிக்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மாற்றுவழியாக இடைத்தேர்தலை துருப்புச்சீட்டாக பயன்படுத்தும் முடிவிலும் இருக்கிறார் விஜய்.
அதாவது, தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால், அனைத்து தொகுதிகளிலும் எப்படியாவது வெற்றிபெற்று த.வெ.க. பலத்தை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறார் விஜய். எனவேதான் அ.தி.மு.க.வில் இருந்து முக்கியமான சீனியர் லீடர்களை த.வெ.க. பக்கம் தூக்கும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன.
அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்!
இன்னொரு பக்கம் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக விஜய் வரவேண்டும் என அமைச்சர்கள் பொதுமேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டனர். இதற்கு வாய்ப்பூட்டு எதுவும் போடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துவருகிறார் விஜய். இது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. குறிப்பாக, த.வெ.க கூட்டணியில் இணைய விரும்பிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூடுதலாக அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அவ்வகையில்தான், ‘த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய்யை அடுத்த பிரதமர் என கூறிவருவதை சீரியஸாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. எனக்குக்கூட பிரதமர் ஆகவேண்டும், மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று பலர் முழக்கமிடுகின்றனர்’ எனக் கூறி நிலைமையை சமாளிக்க முயல்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர். அரசியலில் எதுவும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் காட்சிகள் மாறும். அதன்படி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. விருப்பப்படி த.வெ.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.” என விரிவாக சொல்லி முடித்தார்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, “மத்திய அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அரசு பயணமாகத்தான் தமிழகத்துக்கு வந்தார். புனரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்றே, ஸ்டாலின் ஊட்டிக்குச் சென்று ஒரு மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் மோதல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இயல்பான கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைபிடித்திருக்கிறார். இதை தவறான புரிதல்களுடன் பார்க்கக்கூடாது.” என்றார். இதில் அரசியலை கலந்து பார்ப்பது தவறு. பதி ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது புதிதாக அரசியல் எதுவும் நடக்கலாம், எதுவும் நடந்தும் இருக்கிறதுதானே… பார்ப்போம்!

