சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து திருப்புத்தூர் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ளது நாச்சியாபுரம்.
சுற்றியுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் காவல் நிலையம், வங்கி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான மையமாக இந்த ஊர் விளங்குகிறது.
இங்குள்ள பேருந்து நிழற்குடை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேரில் சென்று பார்வையிட்டபோது, நிழற்குடையின் மேல் செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டன. சாலையின் தரைமட்டத்தைவிடக் கீழே இறங்கிய நிலையில் நிழற்குடை உள்ளது. உள்ளே குப்பைகள் குவிந்து, நிழற்குடையா அல்லது குப்பைக் கூடமா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு உள்ளது. யாரும் உள்ளே செல்ல நினைக்கக்கூட முடியாத நிலை நிலவுகிறது. மேற்கூரையும் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
நிழற்குடை பயன்பாட்டில் இல்லாததால், பேருந்தில் ஏறவும் இறங்கவும் பொதுமக்கள் அருகில் உள்ள மரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில், “இந்த நிழற்குடை கட்டிய புதிதில் நன்றாகத்தான் இருந்தது. மக்கள் அதில் அமர்ந்துதான் பேருந்துக்குக் காத்திருப்பார்கள். சாலையைவிடப் பள்ளத்தில் அமைந்துள்ளதால், மழை பெய்யும்போது மண் முழுவதும் உள்ளே புகுந்துவிட்டது. அதனால் பயன்பாடு நின்றுவிட்டது. 15 ஆண்டுகளாக இதே நிலைதான்.
இந்த வழியாக அனைவரும் சென்றுவருகின்றனர், ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை. பேருந்து எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் நின்றுகொண்டே காத்திருக்க வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் உள்ளே புகுந்து குளம்போல் ஆகிவிடும். மிகவும் சிரமமாக உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார்.
நாச்சியாபுரம் மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம மக்களும் பேருந்தில் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு இந்த நிழற்குடையை மறுசீரமைத்துப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தர வேண்டும் அல்லது புதிய நிழற்குடை கட்டித்தரவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.