“நான் மட்டும் முதல்வரானால்..” இடைத்தேர்தல் களத்தில் பேசிய நாதக சீமான்! இறுதிக்கட்ட பிரச்சாரம் | NTK Seeman byelection speech, Promises Free Electricity, Water and Education if elected to Power

Spread the love

Tamilnadu

oi-Vigneshkumar

தாராபுரம்: இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்போது மின்சாரம், தண்ணீர், கல்வி அனைத்தும் அனைவருக்கும் இலவசமாக தரப்படும் என குறிப்பிட்டார். மேலும், தற்போதைய ஆட்சியாளர்களை போல பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

தாராபுரம் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலில் நாம் தமிழர் சார்பில் கார்த்திகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரச்சாரம் இன்றோடு நிறைவடையும் நிலையில், கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் சீமான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து சீமான் விளக்கினார்.

Seeman byelection speech Seeman

சீமான் பிரச்சாரம்

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “எங்களால் நேற்று ஜெயிக்க முடியவில்லை. இன்று ஜெயிக்க முடியாமல் போகலாம்.. ஆனால், நாளை ஜெயிப்போம். எங்களால் வெல்லவே முடியாது என நினைத்துவிட வேண்டாம். ஆனால் ஒன்று எங்களுக்கு அதிகாரம் வரும்போது நீ கலங்கி நிற்பாய்! அட முன்பே இவர்களிடம் ஆட்சியை கொடுத்திருக்கலாம். நாட்டை மாற்றி இருப்பார்கள் என நீங்கள் நினைப்பீர்கள். இருக்கும் பிரச்சினையை எல்லாம் சரி செய்து இருப்பான் என நினைத்து வருந்துவாய்.

இந்த 6 மாத காலம் மட்டும் எங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இந்தியாவே தமிழ்நாட்டை திரும்பி பார்த்து இருக்கும். யாருடா இந்த முதல்வர் என தமிழ்நாட்டை திரும்ப பார்த்து இருக்கும்! இப்போது இருக்கும் முதல்வரை போல நாடகம் போட மாட்டேன். நான் உண்மையாக இருப்பதால் உங்களுக்கு அண்டா தருகிறேன், பிரிட்ஜ்- மிக்ஸ் தருகிறேன் என சொல்லி கொண்டு இருக்க மாட்டேன்.

அடிப்படை மாற்றம்

இப்போது கூட மின்சார கட்டணத்தை உயர்த்திவிட்டு, அதை சமாளிக்கவே தங்க மோதிர திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இங்கு பல இடங்களில் மின்சாரமே இல்லை. ஆனால், கட்டணம் மட்டும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. எங்கள் தத்துவம் என்பது ஆள் மாற்றம், ஆட்சி மாற்றம் இல்லை. அடிப்படை அரசியல் மாற்றமே எங்கள் முழக்கம். ஏற்கனவே கட்டிய கட்டிடத்திற்கு வெள்ளையடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் நாங்கள் இல்லை. ஜன்னல் பழுதாகிவிட்டது என அதை சரி செய்ய வந்த சீர்திருத்தவாதிகள் இல்லை. கட்டிடத்தை இடித்து தள்ளிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வந்தவர்கள் நாங்கள்.

இங்கு ஆள் மாறி, ஆட்சி மாறினாலும் ஆட்சி முறை மாறாமல் இருக்க இதுவே காரணம்! இந்த சிஸ்டத்தை தூக்கிவிட்டு புதிய ஆட்சி முறையை கொண்டு வருவோம். எங்கள் கனவுகளுக்கும் அவர்களுக்கும் நீண்ட தூரம் இருக்கிறது. எந்தவொரு சமூகத்தையும் நாம் உருவாக்கும்போது அதை கல்வியில் இருந்தே தொடங்க வேண்டும். உலகின் சிறந்த கல்வியை மாணவர்களுக்கு தருவோம். சும்மா 200 யூனிட் இலவச மின்சாரம் அது இது என உத்தரவிட மாட்டேன்.

கல்வி

கல்வி என்பது அரசின் உரிமை.. அதை கொடுக்க வேண்டியது அரசின் கடைமை.. கொடுக்காமல் இருப்பது மாபெரும் கொடுமை. கல்வி என்பது ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் சிறந்த கல்வியை கொடுப்பேன். கட்டணமில்லாத கல்வியை மாணவர்களுக்கு கொடுப்பேன். எல்லாருக்கும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து பார்த்துவிட்டீர்கள். எங்களுக்கும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.. உலகின் சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுகிறேன்.

தோல்விக்கு என்ன காரணம்

இந்தியாவில் கல்வியில் மாற்றத்தை கொண்டு வர முயன்றவர் கெஜ்ரிவால். அதன் காரணமாகவே அவரை தோற்கடித்துவிட்டனர். தொழிலதிபர்கள் சேர்ந்தே இதுபோல செய்கிறார்கள். என்னையும் அதற்கு தான் குறிவைக்கிறார்கள். நான் வந்தால் தண்ணீர் இலவசம். கல்வி தரத்தை உயர்த்துவேன், குவாரியை மூடிவிடுவேன். இதன் காரணமாகவே எங்களை தோற்கடிக்கிறார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *