வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
கொஞ்சநேரம் படுக்கலாம் என்று கட்டிலில் படுத்திருந்த நாராயணனுக்கு தூக்கம் பிடிபடவில்லை.
‘ அப்பா… நீங்க காடுகரைகளை பார்த்த வரைக்கும் போதும். எல்லாத்தையும் வித்துப்புட்டு இங்கேயே வந்துடுங்கப்பா… ‘
ரவி சொன்னது மறுபடியும் காதுகளில் வந்து ஒலித்தது. கண்களைத் திறந்து அன்னார்த்து பார்த்தார். உச்சி வெயில் மர இலைகளின் நடுவே கீழே பாய்ந்து கண்களைக் கூசியது. ஆனாலும் வேப்பமரத்தின் நிழல் கொஞ்சம் ஜில்லென்றுதான் இருந்தது.
ஒரு பெருமூச்சுடன் எழுந்தார். இடுப்பு வேஷ்டியை சரி செய்துகொண்டார். துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டார். அப்படியே வீட்டைச் சுற்றிக்கொண்டு வீட்டின் பின்பக்கம் போனார்.

அவரது அப்பா அம்மா சிலோனில் இருந்து இங்கே வந்தபோது வாங்கிபோட்டது அந்த நிலம். கிட்டத் தட்ட ஆறு ஏக்கர். ரோடு ஓரமாய் அப்போது கட்டிய காரை வீடு. இன்றுவரை ஒழுகாமல் இருக்கும் கெட்டிமெத்தை வீடு. இன்னொரு மூலையில் ஆழமான கிணறு. அவரது அப்பா இருக்கும் வரை வெடிவைத்து தகர்த்து தகர்த்து கிணற்றை ஆழப்படுத்தி தண்ணீரை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு ஏக்கரில் மட்டும் கிணற்றுப் பாசனத்தில் நெல் சாகுபடி நடந்தது. மீதமெல்லாம் மேடுகாடுகள்தான். வயலை விட இரண்டடி உயரத்தில் இருந்தன, அவை. மழை பெய்தால் மட்டும் சோளம் கம்பு துவரை என்று பயிர் தெளிப்பார்கள்.
சாவதற்கு கொஞ்சம் முன்னாள் ஒரே மகனான இவர் பெயருக்கு அந்த நிலத்தை தானம் எழுதி வைத்துவிட்டு கண்களை மூடிவிட்டார் அவர். அவருக்குப் பிறகு அம்மாவும் ரொம்ப நாள் இருக்கவில்லை.
இவர் டவுன் வரை போய் டிப்ளமோ படித்தார். மின்சாரத் துறையில் வேலை கிடைத்தது. கல்யாணம் ஆனது. இவருக்கும் ஒரே பையன், ரவி. தன்னால் டிகிரி படிக்க முடியாத குறையை தனது மகன் மூலம் நிறைவேற்றிக்கொண்டார்.
அவன் டிகிரியோடு நிறுத்தாமல் மேற்படிப்பும் படித்து பம்பாயில் ஒரு கம்பெனியில் போய் வேலைக்குச் சேர்ந்து அங்கிருந்து அப்படியே லண்டனில் வேலைத் தேடிக்கொண்டு போய் அங்கேயே செட்டிலும் ஆக்கிவிட்டான். ஓரிரு வருடங்களில் அவனுக்கு கல்யாணம் செய்துவைத்தார்கள். அவனுக்கும் ஒரே பையன். இப்போது சுமார் பத்து வயது.

இடையில் மனைவி மல்லிகாவும் போய்ச் சேர்ந்துவிட்டாள். ரவிதான், அம்மா இல்லாமல் தனியாக கஷ்டப்படுவதற்குப் பதிலாக, வேலையை விட்டுவிட்டு தன்னுடன் வந்து இருக்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தான். இவரோ முழு சர்வீஸ் முடித்துவிட்டுத்தான் வெளியே வருவேன் என்று விடாப்பிடியாக இருந்தார்.
அங்கே இங்கே என்று வேலை பார்த்து வந்தவர், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து, உள்ளூருக்கு பக்கமாகவே வேலையை மாற்றிக்கொண்டார். அப்படியே தக்கவைத்தும் கொண்டார். வீடு நிலங்களையும் பார்த்துக்கொண்டு, தனக்குத் தேவையானவைகளை தானே கவனித்துக்கொண்டு, வீட்டிலிருந்தே புல்லட்டில் ஆறு கிலோமீட்டர் போய் வேலைப் பார்த்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னால்தான் ரிடையர் ஆனார்.
ரவி மறுபடியும் பிடித்துக்கொண்டான், ‘ ஏம்பா… நீங்க ஆசைப்பட்ட மாதிரி முழு சர்வீஸ் முடிச்சிட்டீங்கல்ல. பென்ஷனும் வர ஆரம்பிடுச்சு. இனிமே வருஷம் ஒருதடவை லிவிங் சர்டிபிகேட் கொடுக்க மட்டும் இந்தியா போனா போதும். லண்டனுக்கு வந்து சேருற வழியப் பாருங்கப்பா… ‘
கடைசிமூச்சு வரை சொந்த ஊரிலேயே இருக்கவும் அசை. அதே சமயம், மகன் மருமகள் பேரப் பையனுடன் போய் தங்கி சந்தோஷமாய் காலத்தை கழிக்கவும் ஆசை. முடிவு எட்ட முடியவில்லை, அவரால்.
நடந்து போய்கொண்டிருந்தவர் ஒருகணம் அப்படியே நின்றார். நிமிர்ந்து பார்த்தார். ஒருகாலத்தில் பச்சையாய் தெரிந்த காடுகள் இப்போது வெறிச்சோடிக் கிடந்தன. அவருடையது மட்டுமில்லை. சுற்றுவட்டாரத்து காடுகள் எல்லாமுமேதான் அப்படித்தான் கிடந்தன. அடிக்கும் வெயிலுக்கு கானல் நீர் நிற்காமல் ஓடியது. வருடம் ஒருமுறை மழை வரும்போது மட்டும்சோளம் கம்பு என்று விளையும். மீதி காலம் இப்படித்தான் தரிசாகவே கிடக்கும்.

இப்போது நிறைய பேர் நிலத்தை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். போன வாரம் கூட முத்துப் பாண்டி வந்து இவரைப் பார்த்தான்.
‘ அண்ணே… ரொம்ப ரகசியமா வச்சுக்கங்க… நம்ம ….த்துறை மினிஸ்டர், ராம…..ன் இருக்காரில்ல… அவர் தன்னோட பினாமி பேர்ல நிலத்தையெல்லாம் வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கார். சோலார் சிஸ்டம் போடப் போறாங்களாம்.
எல்லா நிலத்தையும் வளைச்சு வளைச்சுப் போட்டுக்கிட்டிருக்காங்க… அவரோட கைத்தடிங்கதான் வந்து பார்த்துக்கறாங்க. நான் கூட ரெண்டு மூணு பேர்த்துக்கிட்டே இருந்து நிலத்தை கைமாத்தி கொடுத்திருக்கேன்னா பார்த்துக்கங்களேன்… கைமேல கமிஷன் வந்துடுச்சுண்ணே. உங்ககிட்டையும் ஆறேழு ஏக்கர் இருக்கில்ல.
இனிமே விவசாயம் நடத்தி ஆகப் போறது ஒண்ணுமில்லை. நீங்களும் கைமாத்தி விட்டுடுங்க. கொஞ்சம் ஒயிட், மீதி பூரா பிளாக். பிரச்சினை ஏதும் வராத மாதிரி அவங்களே பார்த்துப்பாங்கண்ணே… எல்லாத்தையும் வித்துட்டு மேல்நாட்டுக்குப் போய் பையனோட சந்தோஷமா மீதி காலத்தையும் கழிக்கப் பாருங்கண்ணே… ‘
அவன் சொன்னதும் இப்போது இவரது காதுகளில் ஒலிக்கத்தான் செய்தது.
இரண்டு வருடங்களாகிவிட்டன கடைசியாக கம்பு, துவரை தெளித்து. கிணற்றிலும் நான்கைந்து வருடங்களாக தண்ணீர் இல்லை. கொஞ்ச காலம் தவளைகள் மட்டும் சத்தம் போட்டு வாழ்ந்தன. இப்போது அவைகளும் இல்லை. காய்ந்து போய் கிடக்கிறது, கிணறு.
அந்த அமைச்சரின் பெயரை நினைத்ததும் அவர் செய்த தில்லுமுல்லுகள் எல்லாம் மனதுக்குள் வந்து போயின. எத்தனை ஊழல்கள். எத்தனை புகார்கள். அடிக்கடி பேப்பர்களில் அவரது அடாவடிக்கைகள் சந்தி சிரிக்கும். கொள்ளை அடித்த பணத்தையும் வளைத்துப்போட்ட நிலங்களையும் பினாமி பெயர்களில் வைத்திருப்பதாக கேள்வி. அப்படி வளைத்த நிலங்களில் இப்போது சோலார் போட்டுக்கொண்டிருக்கிறாராம், இப்போது. அதுதான் நல்ல வருமானமாம்.
ஒரு பெருமூச்செறிந்தார் நாராயணன். ஏழை ஏழையாகவே இருக்கிறான், பணக்காரன் மேலும் மேலும் பணக்காரனாகிகொண்டே போகிறான்.
யோசித்துக் கொண்டே வீட்டைப் பார்த்துத் திரும்பினார். பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. மதியத்துக்கும் சேர்த்து காலையிலேயே சமைத்து வைத்திருந்தார். இரவுக்கு மட்டும் கடைவீதிப் பக்கம் போய்விடுவார். தோசையோ இட்லியோ எது கிடைக்கிறதோ, அதைச் சாப்பிட்டுக்கொள்வார்.

தட்டில் சாதத்திப் போட்டு தயிரை ஊற்றி ஊறுகாயையும் வைத்துக்கொண்டு தண்ணீர் செம்புடன் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். திடீரென்று அங்கே பிரசன்னமானான் முத்துப் பாண்டி. கூடவே வெள்ளையும் சொள்ளையுமாய் இன்னொரு ஆள், வேறு.
‘ அண்ணே… நான் சொல்லலே… இவர்தான் அவர். கைமேல காசுண்ணே… பாண்டு பத்திரம் எழுதற வேலை எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க. நீங்க உங்க ஆதார் கார்டையும் உங்கபேர்ல இருக்கற பத்திர காப்பி ஒன்னு மட்டும் கொடுத்தா போதும்… கார்ல போயி கையெழுத்தைப் போட்டுட்டு கார்லயே வந்திடலாம். போகும்போதே பணம் கையில வந்திடும்… ‘
அந்த ஆள் பார்க்க குண்டாக இருந்தான். கரிய மேனி. கிடாமீசை. பாக்கெட்டுக்குள் இருக்கும் யாரோ ஒருவரின் படம் வெளியே லேசாய் தெரிந்தது. பாக்கெட் பெருத்தும் இருந்தது. இவன் சொல்ல சொல்ல அவர் தலையை ஆமாம் என்பது போல ஆட்டிக்கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் குறுக்கிட்டு, ‘ பாண்டி… அய்யா சாப்பிட உட்கார்ந்திருக்கார். தொல்லை பண்ணவேணாம். சாப்பிட்டு முடிக்கட்டும்… அதுவரை நாம அந்த தென்னந்தோப்புப் பக்கம் போயிட்டு வரலாம்… யோசிக்கவும் கொஞ்சம் டைம் கொடுத்த மாதிரி இருக்குமில்லையா… ‘ என்றுவிட்டு கண்ணால் ஜாடை காட்டி முத்துப்பாண்டியை கூட்டிக்கொண்டு போனார் அவர். ஒரு பெருமூச்சை விட்ட நாராயணன் சாப்பிட ஆரம்பித்தார். ஆனாலும் யோசனையும் கூடவே ஓடத்தான் செய்தது.
ரவியும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான், காடு கரைகளை விற்றுவிட்டு அங்கேயே வந்துவிடச் சொல்லி. ஆறு மாதங்களுக்கு முன்பே பாஸ்போர்ட்டையும் வாங்கிக் கொடுத்துவிட்டான்.
விவசாயமும் இல்லை. வேலையும் இல்லை. தனியாக உட்கார்ந்து காலத்தைக் கழிப்பதற்குப் பதிலாக லண்டனுக்கு போய்விடலாம்தான்.
யோசித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தார். கட்டிலில் போய் உட்காரலாம் என்று எழுந்தவர், கட்டிலுக்கு கீழே கிடந்த தினசாரி பேப்பரில் கவனத்தை செலுத்தினார்.
பேப்பரை எடுத்து விரித்தார். எதேச்சையாய் அதே அமைச்சர் பற்றிய செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. அவரது அசையும் சொத்து, அசையா சொத்துக்கள் அதில் சொல்லப் பட்டிருந்தன. எல்லாம் சேர்த்து நானூறு கோடி என்று போட்டிருந்தது.

ஒயிட்டில் மட்டுமே இவ்வளவு என்றால், பிளாக்கில் எவ்வளவு வைத்திருப்பாரோ. நாராயணனுக்குத் தெரிந்து, ஆரம்ப காலத்தில் அந்த ஆள் சொந்தமாக லாரிகள் வைத்து வாடகைக்கு ஓட்டிக்கொண்டிருந்தவர். இன்றைக்கு கோடிகளில் புரள்கிறார்.
விவசாயம் பார்ப்பவனும், வேலை பார்ப்பவனும், தொழில் செய்கிறவனும் அப்படியேத்தான் இருக்கிறான். இவர்கள் மட்டும் எப்படித்தான் பணத்தை உருட்டுகிறார்களோ என்று நினைக்கையில் சலிப்புத்தான் வந்தது. வெறுப்பும் கூட வந்து சேர்ந்துகொண்டது.
அதே நேரம் முத்துப்பாண்டியும் அந்தாளும் திரும்பி வந்தார்கள். இன்னொரு கட்டிலை இழுத்துப் போட்டார் இவர். அதில் உட்கார்தார்கள், அவர்கள்.
‘ எனக்கு இப்போ நிலத்தை விற்கற ஐடியா இல்லை. அப்படி ஒரு ஐடியா வரும்போது அவசியம் சொல்லறேன்… அப்போ வாங்க… இப்போ போங்க… ‘ என்றார் இவர் அமைதியாக.
அவர்கள் இருவரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.
‘ என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க… நீங்க சரி சொல்லுவீங்க, சீக்கிரமே கிரயம் செஞ்சுடலாம்னு இப்போத்தான் சொல்லிக்கிட்டே வந்தேன். நீங்க திடீர்னு கவுத்துட்டீங்களேண்ணே… ‘ என்ற முத்துப்பாண்டி கூட வந்தவரையும் ஒருமுறைபார்த்துவிட்டு இவரிடம் திரும்பி, ‘ அண்ணே… நீங்க ஏதோ குழப்பத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்… பணமெல்லாம் கரெக்ட்டா வந்திடும். பாருங்க… இந்த சுத்துப்பட்டுல பத்துப்பன்னிரெண்டு பேர்கிட்ட நிலம் வாங்கியிருக்காங்க இவங்க. உங்களோடது மட்டும்தான் பாக்கி.
அதையும் வாங்கிட்டா கம்பிவேலி போட்டு சோலார் வேலையை ஆரம்பிச்சுடுவாங்க… கவலையே படாதீங்கண்ணே… காதும் காதும் வெச்ச மாதிரி கிரையம் பண்ணி பணத்தையும் செட்டில் பண்ணிடலாம். நீங்க ஊம்னு சொல்லுங்க… இப்போவே பத்தாயிரம் ரூபா முன்தொகையா கொடுத்துட்டுப் போயிடுவார். கையெழுத்தெல்லாம் ஒன்னும் வேண்டாம். நம்பிக்கைத்தான். ஒரு நல்ல நாள் பார்த்து பேப்பர் வேலையை ஆரம்பிச்சுடலாம்… ‘
அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அந்தாள் பாக்கேட்டிலிருந்து கத்தையாய் பணத்தை எடுத்தார்.
நாராயணன் உடனே மறுத்தார். ‘ பாண்டி… பணம் எங்கே ஓடிடப் போகுது. முன்தொகை எதுவும் இப்போ வேண்டாம்… நான் பையன்கிட்டயும் கலந்து பேசிக்கிட்டுத்தான் முடிவெடுக்கணும்… இப்போ நீங்க கிளம்புங்க… நான் சொல்றப்ப வந்தாப் போதும்… ‘
கைகளை பிசைந்தபடி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவர்கள் கிளம்பிவிட்டார்கள்.
யோசித்தார் நாராயணன். ரொம்ப நேரம் யோசித்தபிறகு தனக்குள் ஒரு முடிவு செய்துகொகண்டு மகனிடமும் பேசினார். அவனும் அதற்கு சரி சொன்னான். தான் வேலை செய்த ஆபீசில் போய் பேசினார். பத்திரம் தயார் ஆனது. கூடவே விசாவும் தயார் ஆனது. பதினைந்தே நாட்கள்தான்.
விமானம் பிடித்து வெளிநாடு கிளம்பிவிட்டார்.
இவரிடம் இருந்து எந்த செய்தியும் வராமல் போகவே காத்திருந்து பார்த்துவிட்டு திடீரென்று முத்துப்பாண்டியும் இன்னும் இரண்டு கைத்தடிகளும் அங்கே வந்து நின்றபோது அதிர்ந்து போயினர்.
ஒரு புதிய போர்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்தது.
‘ இந்த இடம் மின்சார இலாக்காக்குவுக்குச் சொந்தமானது. யாரும் அத்துமீறினால் தண்டனைக்குள்ளாவார்கள்… ‘
‘ தம்பி, இவனுங்களுக்கு நிலத்தைக் கொடுக்க எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லைப்பா… பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாயிட்டே இருக்கான். ஏழை எழயாவே இருக்கான். அவனுங்க பணம் சேர்க்க நாம அவங்ளுக்கு துணைப் போகக்கூடாது. முப்பத்தொன்பது வருஷமா நமக்கு சோறு போட்டது மின்சாரவாரியம். அதுக்கே நம்ம நிலத்தை தானம் எழுதி வச்சுடலாம்னு ஒரு யோசனை… ‘
‘ நல்ல முடிவுப்பா… உடனே டிவிஷனல் இஞ்சினீயரைப் போயி பாருங்க. என் கிளாஸ்மேட் தான். கூட பிஈ படிச்சார்… பத்திரப் பதிவை சீக்கிரம் முடிங்க. விசாவுக்கு நான் ஏற்பாடு பண்றேன்… ‘
பதினைந்து நாட்கள் முன்னாள் நாராயணனும் ரவியும் மேற்கண்டபடித்தான் பேசிக்கொண்டார்கள்.
முற்றும்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.