Tamilnadu
oi-Halley Karthik
சென்னை: தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய நீரை திறந்துவிட வேண்டும் என்று, காவிரி நீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது. ஆனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த கனமழையால், தற்போது கபினியிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த அணையின் தண்ணீரை நம்பி, சுமார் 4 லட்சம் ஏக்கர் விவாசய நிலங்கள் இருக்கின்றன. குறுவை சாகுபடி இதை நம்பித்தான் உள்ளது. மேட்டூருக்கு காவிரியிலிருந்துதான் நீர் வர வேண்டும். இந்த முறை கர்நாடகா நீரை திறக்காததால், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது.

கர்நாடகாவுக்கு உத்தரவு
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பது உண்மைதான். இருப்பினும் விகிதாச்சார அடிப்படையில், 15 நாட்களுக்கு 4.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று சாக்கு சொல்லி கர்நாடகா நீரை திறக்கவில்லை. இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் கர்நாடாகாவின் குடகு மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால், கர்நாடகாவின் கபினி அணை அதன் முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. இதனால் அணையில் நீரை தேக்கி வைக்க முடியாமல் கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட்டிருக்கிறது.
எனவே, பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை நிலவரப்படி 27,000 கனஅடி நீர் வந்தது. எனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. நேற்று வரை 11,988 கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று 18,905 கனஅடியாக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் விவசாயம்
உண்மையில் தமிழ்நாடு காலங்காலமாக கர்நாடாகவின் தயவை நம்பிதான் இருந்ததா? என்று கேட்டால்.. இல்லை என்றே பதில் வருகிறது. கடந்த 3000 ஆண்டுகளாக டெல்டாவில் விவாசயம் செய்து வந்த மரபு நம்முடையது. ஆனால், 100 ஆண்டுக்கு முன்னால் தடுப்பணையை கட்டி நம்முடைய விளைச்சலை கர்நாடகா அப்படியே சுருக்கிவிட்டது. மறுபுறம் காவிரியின் கிளை ஆறுகளுக்கு குறுக்கே அணைகளை கட்டியதன் மூலம், கர்நாடகா தனது பாரசன பரப்பை 3 லட்சம் ஏக்கரிலிருந்து 10 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.