தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராகப் பதவி வகித்துவந்த கே.சீனிவாசன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, தலைமைச் செயலக வட்டாரத்தில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
தவெக அரசு பதவியேற்ற பின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவின்போது சபாநாயகரின் இருக்கை அருகே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த அதிகாரியை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். அவர், தமிழகச் சட்டப்பேரவைக்கு அதிகார மட்டத்தில் தலைமை அதிகாரியான, சட்டப்பேரவையின் செயலாளரான கே.சீனிவாசன்.
சட்டப்பேரவையின் தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர், அதாவது சபாநாயகர் பதவி இருக்கும் சூழலில் செயலாளராக இந்த அரசு அதிகாரிதான் இருப்பார்.
எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்த காலத்திலேயே சட்டப்பேரவைச் செயலாளராக இருந்தவர் இந்த சீனிவாசன். 2021ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகும் இவர் தனது பதவியில் தொடர்ந்தார். 2023 ல் இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனாலும் திமுக அரசு ஓய்வுக்குப் பிறகும் இவருக்குப் பதவி நீட்டிப்பு தந்தது.
அந்தப் பதவி நீட்டிப்பின் படி இந்தாண்டு நவம்பர் வரை இவருக்கு சர்வீஸ் இருக்கும் நிலையில், தற்போது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.