ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றி வரும் மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சீனா உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளின் முகவர்களிடம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களைப் பகிர்ந்ததாக ஜம்மு – காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண், தற்போது ஜம்முவில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் (Academicians) என்ற போர்வையில் பலர் இந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றனர்.

தொடக்கத்தில் அந்தப் பெண்ணிடம் சுற்றுச்சூழல் மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) தொடர்பான கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர், மெல்ல மெல்ல நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ உத்திகள் சார்ந்த உணர்வுபூர்வமான தலைப்புகளில் கட்டுரைகளை எழுத வைத்து, ராணுவ ரகசியங்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது புலனாய்வு அமைப்புகளின் முதற்கட்ட விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.