நூறு சாமி: “இக்கட்டான சூழ்நிலைகளில்…"- திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், இசையமைப்பாளர், படத் தயாரிப்பாளர் எனப் பல முகங்களுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில், இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படம் இன்று (ஜூன் 19) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், ‘நூறு சாமி’ திரைப்படம் எவ்வித சிக்கல்களும் இன்றி வெளியாவதற்கு உறுதுணையாக இருந்த திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு, படக்குழுவினர் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

திருப்பூர் சுப்ரமணியன்

இதுகுறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கப் பதிவில், “மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் சார், கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி நீங்கள் எனக்கு அளித்து வரும் நிபந்தனையற்ற உதவிக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. ‘நூறு சாமி’ படத்தின் வெற்றியில் ஒரு முக்கியப் பங்கு உங்களது வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் சரியான நேரத்தில் செய்த உதவிக்கே சேரும். இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களுக்குத் துணையாக நிற்கும் உங்களது அர்ப்பணிப்பும் தாராள குணமும் நான் பெரிதும் மதிக்கும் பண்புகள். எங்களைப் போன்றவர்கள் இக்கட்டான காலங்களைச் சந்திக்கும் போது திரையுலகிற்கு உங்களது சேவை ஒரு வரப்பிரசாதமாகும். எங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நீங்கள் இருந்துள்ளீர்கள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான ஜி. தனஞ்செயன், “எனக்கும் திருப்பூர் சுப்பிரமணியம் சாருக்கும் தமிழ் சினிமா நிகழ்வுகள் பற்றி அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால், தமிழ் சினிமாவில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் உடனே அதை கையில் எடுத்து, தீர்த்து வைத்து, படங்களை ரிலீஸ் செய்து வைப்பதில் அவருக்கு இணை அவரே. சமீபத்தில் ‘மத கஜ ராஜா’ தொடங்கி, ‘கருப்பு’ என பல படங்களுக்கு முன்னிருந்து உதவி செய்து, இன்று ‘நூறு சாமி’ எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நாளை வெளியாகப் பெரும் உதவியாக இருந்தார். நன்றி சுப்பிரமணியம் சார், தங்கள் சேவை தமிழ் சினிமாவிற்கு என்றும் தேவை” என்று பாராட்டியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *