ஆர்வம், கற்பனை, தொடர் பயிற்சி… இவற்றைத் தனது கைகளோடு இணைத்து ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார் கேசவன்.
சட்டப் படிப்புக்கு மத்தியில் கலைப் பயணத்தையும் தொடர்ந்து வரும் இவரது படைப்புகள், தனிப்பட்ட ஆர்டர்களைக் கடந்து மலேசியா வரை பயணித்திருக்கின்றன.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவைச் சேர்ந்த 23 வயதான கேசவன், சேலம் அரசு சட்டக் கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி. படித்து வருகிறார். ஒருபக்கம் சட்டப்படிப்பு, இன்னொருபக்கம் ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார். எந்தவிதமான ஓவியப் பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், ஆர்வம், கற்பனை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தனது திறனை வளர்த்துக்கொண்டுள்ளார்.
கற்பனையில் தொடங்கி… பயிற்சியில் வளர்ந்த திறன்!
சிறுவயதிலேயே வண்ணங்கள் மற்றும் புதிய படைப்புகளை உருவாக்குவதில் கேசவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பப் பள்ளிக் காலங்களிலேயே பள்ளிக் கண்காட்சிகள், போட்டிகள் உள்ளிட்டவற்றில் தனது படைப்புகளை உருவாக்கி பங்கேற்றுள்ளார். ஆனால், ஊரடங்கு காலத்தில்தான் தனது படைப்புத் திறனை முறையாக வளர்த்துக்கொள்ளும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார். அப்போது மனித முகங்களை வரையத் தொடங்கி, பென்சில் மற்றும் பேனாவில் தொடர்ந்து பயிற்சி செய்து தனது திறனை மெருகேற்றியுள்ளார்.
“இதுவரை எவ்வித ஓவிய, நூற்கலைப் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்றதில்லை. என்னுடைய கற்பனை, ஆர்வம், தொடர்ந்து செய்த பயிற்சி ஆகியவற்றால்தான் என்னை நானே வளர்த்துக்கொண்டேன்.
12-ம் வகுப்பில் எனக்குப் பிடித்த ஆசிரியர் திருநாவுக்கரசு சாருடைய உருவப்படத்தை அவருடைய பிறந்தநாளுக்காக வரைந்து பரிசாகக் கொடுத்தேன். என்னுடைய திறமையைப் பார்த்து அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினார். அவரிடம் இருந்து ஆசீர்வாதமும் பெற்றேன். அந்த நாள் என்னுடைய பயணத்தில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது” என்கிறார்.
ஒரு படைப்புக்குப் பின்னால்… பல நாள் உழைப்பு!
ஒரு முகத்தைப் பென்சிலில் வரைய 7 முதல் 8 மணி நேரமும், இரண்டு முகங்கள் என்றால் சுமார் இரண்டு நாள்களும் ஆகும். நூற்கலைக்கு 10 முதல் 15 நாள்களும், சுவரோவியத்துக்கு 3 முதல் 7 நாள்களும் தேவைப்படும். நூற்கலைக்கான பொருள்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரையும், சுவரோவியத்துக்கு சுமார் ரூ.4,000 வரையும் செலவாகிறதாம்.