பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எழுதியிருக்கும் சிந்தை கட்டுரையில், “நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது உறுதி. அது கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப்பெயர்கள். நூல்களில் காணப்படும் ’பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) அனைத்தும் பொய்யானவை.

அவற்றை இணையத்தில் தேடினால் அப்படிப்பட்ட எண் இல்லை என்றே தகவல் வருகிறது. பதிப்பக முகவரியும் போலி என்றே தோன்றுகிறது. அகல் விளக்கு பதிப்பக முகவரி இது: 3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091. மடிப்பாக்கத்தில் பாரத் நகரோ பிரம்மபுத்திரா தெருவோ இருப்பதாக கூகுள் வரைபடம் காட்டவில்லை. நூலில் akalvilakkupathipagam@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அது இந்நூல் விநியோகத்துக்காக உருவாக்கப்பட்டது போலும். கைப்பேசி எண் எதுவும் இல்லை.