அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய மரபியல் காரணங்கள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
அதில், “தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா உட்பட, கடந்த காலத்தில் கடுமையான பல பஞ்சங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான பஞ்சங்களால், முன்னோர்களின் உடல், மிகக் குறைந்த உணவில் இருந்தும் ஆற்றலை உறிஞ்சி, அதை உடலுக்குள் கொழுப்பாகச் சேமித்து வைக்கும் வகையில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தகவமைத்துக் கொண்டது.
தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட இந்த ‘சிக்கனமான மரபணு’ (Thrifty Genes), இன்றும் நமது உடலியலில் தொடர்கிறது. இன்று உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், நமது உடலின் மரபணு கட்டமைப்பு இன்னமும் ஆற்றலையும் கொழுப்பையும் சேமிக்கவே முயல்கிறது.
நவீன காலத்து உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த மரபணு அமைப்போடு சேரும்போது, குறைந்த வயதிலேயே இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் ரத்த நாள அடைப்பு போன்ற பிரச்னைகள் வருகின்றன.

இந்தியர்கள் வெளிப்புறத் தோற்றத்திற்கு ஒல்லியாகவோ அல்லது இயல்பான எடையிலோ இருந்தாலும், அவர்களது கல்லீரல், இதயத்தைச் சுற்றியுள்ள உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது. இதை அறிவியலில் TOFI (Thin Outside, Fat Inside) என்பார்கள். இதனால்தான் புறத்தோற்றத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் போலத் தோன்றுபவர்களுக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.
மேலைநாட்டினருடன் ஒப்பிடும்போது தெற்காசியர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் முன்னதாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன. மரபியல் அமைப்பை உடனடியாக மாற்ற முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் இந்த மரபியல் அபாயத்தைக் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்…’ என்று குறிப்பிட்டுள்ளார்.