
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழ்நாடு மக்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய அவர், தமிழ் இலக்கியங்கள் குறித்த தனது ஆழமான உரைகளாலும் புகழ்பெற்றார். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.
அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பிலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுமா என செய்தியாளர்கள் அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சாலமன் பாப்பையா ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த அரசு மரியாதை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.