“பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம்…கொந்தளிக்கும் கடலோர மக்கள்… – Kumudam

Spread the love

க டலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடலில் 18 கி.மீட்டர் தூரத்தில் ரூ.425 கோடி செலவில் நான்கு ஹைட்ரோ கார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்று, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கிறது. இந்த விவகாரம்தான் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ல் மத்திய அரசால் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2018ல் முதல் சுற்று ஏலம் காவிரிப் படுகையின் நிலம் மற்றும் கடல் பகுதியில் 5,034 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், இரண்டாவது சுற்று ஏலம் 454 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், மூன்றாவது சுற்று ஏலம் 1863 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும், நான்காவது சுற்று ஏலம் காவிரி படுகையினுடைய ஆழ்கடல் பகுதியில் 4,064 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும் விடப்பட்டு சில தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசால் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால், வடக்கே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் தெற்கே ராமநாதபுரம் வரை நிலம் மற்றும் கடல் பகுதிகள் அழியக்கூடிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே இயற்கையின் பெரும் அரணாக பார்க்கப்படும் மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகள் அமைந்திருக்கும் கடல் பகுதியில் 18. கி.மீ தொலைவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க தனியார் எண்ணெய் நிறுவனம் தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியிருக்கிறது. அது தற்போது பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படும் தகவல்தான் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் திட்டத்தை தொடக்கம் முதலே எதிர்த்து வரும் மயிலாடுதுறை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம். ‘ஹெச்ஓஈசி என்ற தனியார் எண்ணெய் நிறுவனம் மத்திய அரசிடம் ஏலம் உரிமம் பெற்று நான்கு எண்ணெய் கிணறுகளுக்கு தமிழக மாநில கடலோர மண்டல மேலாண்மை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமேம்பாட்டுச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்ட பகுதியில்தான் பரங்கிப்பேட்டையும் வருகிறது.

கடல் பகுதியில் 12 நாட்டிகல் மைல், அதாவது 22 கி.மீ வரைக்கும் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதால் இதை மறுக்கும் உரிமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, இதை தமிழக அரசு விண்ணப்ப நிலையிலேயே மறுத்து நிராகரிக்க வேண்டும் முந்தைய திமுக அரசிடமும் இதுபோல அனுமதி கேட்டபோது அந்த அரசு அதற்கு அனுமதி தரவில்லை. அதேமாதிரி புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசும் மறுக்கவேண்டும்.

கடலில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டாலும் அந்த உற்பத்தியை எடுத்துச் செல்ல கடல் அருகே உள்ள நிலப்பகுதியில்தான் குழாய்களை அமைப்பார்கள். இதனால் பிச்சாவரம் பகுதியிலுள்ள அலையாத்தி காடுகள் பாதிக்கப்படும். கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும்போது அதில் கச்சா எண்ணைய் மற்றும் ரசாயன கசிவுகளைத் தவிர்க்கவே முடியாது. இது அந்த பகுதி சுற்றுச்சூழலையே ஒட்டுமொத்தமாக பாதித்துவிடும். அலையாத்தி காடுகள் ஜெய என்பது மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதியாகவும் இருக்கிறது. அவை எல்லாமே அழிந்துபோகும். கடலில் மீன்வளம் என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.

மேலும், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும்போது நில அதிர்வு சோதனை நடத்தியே ஆக வேண்டும். இதில் மூன்று செகண்டிற்கு ஒரு வெடிப்பு என்றபடி பூமிக்கடியில் வெடிப்பார்கள். இந்த அதிர்வினால் மீன் இனங்களின் நுண்ணுணர்வு உறுப்புகள் சிதைந்துபோகும். மீன்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறும் அல்லது இறந்துவிடும். ஒட்டுமொத்த பகுதியும் மீன்கள் இல்லாத பகுதியாக மாறிவிடும். மீன்கள் இல்லாத பகுதியில் மீனவர்களுக்கு என்ன வேலை? மீன்பிடி தொழில் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

கடலில் ஒரு எண்ணைய் கிணறு அமைத்துவிட்டால், அந்தக் கிணற்றைச் சுற்றி ஒரு கி.மீ பரப்பளவிற்கு ஒரு சிறிய மரத்துண்டுகூட மிதந்து செல்ல முடியாது. அப்படியொரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகிவிடும். மீனவர்களின் படகுகளுக்கும் அனுமதி கிடையாது. மீறி சென்றால் அரசு படைகள் அல்லது தனியார் படைகளைக்கொண்டு மீனவர்கள் விரட்டப்படுவார்கள். ஆக ஒரு முழுக்கடலையும் ஹைட்ரோ கார்பன் பெயரில் கபளீகரம் செய்துவிடுவார்கள்.

ஏற்கெனவே கிழக்கு கடற்கரை பகுதியில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் உரிமம் பெற்று அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மற்றுமொரு நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டால், ஏற்கெனவே காத்திருக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். பின்னர் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடலோரப் பகுதியும் நாசமாகிவிடும். இந்தப் பிரச்னை தொடருமானால் மக்களை ஒருங்கிணைத்து மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு மூலம் போராட்டங்களை நடத்தவும் தயாராக உள்ளோம்” என்றார்.

ஜயராமன் தமிழக கடலோர பகுதிகளில் வாழும் இதுகுறித்து விளக்கம் பெற தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் மற்றும் மாவட்ட கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை குழும தலைவரும். கடலூர் மாவட்ட கலெக்டருமான சிபி ஆகித்ய செந்தில்குமார் ஆகியோரை தொடர்புகொண்டபோது, “சார் மீட்டிங்ல இருக்கார்” என்ற பதில் மட்டுமே கிடைத்தது.

கடலோர மாவட்டங்கள் மீண்டும் போர்க்களமாக மாறுவதை புதிய அரசு அனுமதிக்கக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *