பரந்தூர் ஏர்போர்ட் வேண்டுமா வேண்டாமா? குழப்பத்தில் விஜய்.. செய்வதறியாத விழிக்கும் ஏகனாபுரம் மக்கள் | Chennai Parandur Airport Project Emerges as CM Vijay First Major Political Test in Tamil Nadu

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதற்காகவே முந்தைய திமுக ஆட்சியில் பரந்தூர் இறுதி செய்யப்பட்டது. ஆனால், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இப்போது சிக்கலான ஒரு இடத்தில் அத்திடம் நிற்கிறது. இதில் தெளிவில்லாத சூழல் இருப்பதால்.. ஏகனாபுரம் மக்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

சென்னை மக்கள் சுமார் 20 ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் புதிய பசுமை வழி விமான நிலைய திட்டத்திற்காகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், தவெக தலைவர் விஜய் தனது முதல் போராட்டக் களமாகத் தேர்ந்தெடுத்த இடமும் இதே பரந்தூர் தான். பரந்தூர் ஏர்போர்ட்டை எதிர்த்து அரசியல் செய்த விஜய்க்கு இப்போதே இந்த திட்டமே பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

airport Parandur Vijay

ஏகனாபுரம் கிராம மக்கள்

ஏகனாபுரம் கிராம மக்களின் விளைநிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதா அல்லது முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சென்னைக்கு அதிநவீன விமான நிலையத்தை அமைப்பதா என்ற இக்கட்டான நிலையில் முதலமைச்சர் விஜய் தவித்து வருகிறார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், குறைந்தது 12 பெரிய ஏரிகள், 20 குளங்கள் மற்றும் பல நீர்ப்பாசனக் கால்வாய்கள் அழியும் என்றும் இதனால் பருவமழைக் காலத்தில் சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து இருப்பதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சமீபத்தில் கூட கூறியிருந்தார். இருப்பினும், இந்த திட்டம் தொடர்பாக அரசின் தற்போதைய நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால், ஏற்கனவே தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் நிலத்தை வழங்கிய கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சிப்காட்

முதலமைச்சர் விஜய் தனது வாக்குறுதியைக் காப்பாற்றி இத்திட்டத்தைக் கைவிடுவார் என்ற நம்பிக்கையில் ஏகனாபுரம் மக்கள் காத்திருக்கின்றனர். அதேநேரம் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழில்பேட்டை (சிப்காட்) அமைக்கப்படலாம் என்ற தகவல் மற்ற கிராம விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக அரசு இந்தத் திட்டத்திற்காகச் சந்தை மதிப்பை விட மூன்று முதல் நான்கு மடங்கு கூடுதல் இழப்பீட்டுடன், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் மாற்று வீடு போன்ற சலுகைகளை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சொல்வது என்ன

இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள 401 சதுர அடி பரப்பளவிலான வீடுகள் தங்களுக்குப் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர். மிகவும் சிறியதாக இருக்கும் இந்த வீடுகளில் தங்களால் வாழ முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர். அதுமட்டும் இன்றி, இந்த திட்டத்தின் இழுபறி நிலையால் தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், தங்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூட வேலை கிடைப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போதைய குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு தனது முடிவை விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தற்போது தமிழகத்தில் சென்னை தவிர, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகிய ஐந்து விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பெங்களூர் அருகில் உள்ள தொழில் நகரமான ஓசூரிலும் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பின்னணி

இதில் சென்னை ஏர்போட் தான் மாநிலத்தில் ரொம்பவே பிஸியானது. இடபற்றாக்குறை காரணமாக ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில், புதிய ஏர்போர்ட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளன. சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் 2006 திட்டம், அப்போதைய திமுக அரசின் கூட்டணியில் இருந்த பாமகவின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.

அதன் பின்னர், 2011 முதல் 2021 வரையிலான அதிமுக அரசின் முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு கடந்த திமுக ஆட்சியில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு செய்த திருப்போரூர், பரந்தூர், பண்ணூர் மற்றும் படாளம் ஆகிய நான்கு இடங்களில் இருந்து பரந்தூர் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..
தொழில்பேட்டை அமைக்கப்பட்டால்.. தங்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் போராடத் திட்டமிட்டு வரும் சூழலில், மற்றொரு தரப்பினர் அங்கு தொழிற்சாலைகள் அமைப்பதையே கடுமையாக எதிர்க்கின்றனர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்குப் பதிலாக, கையகப்படுத்திய நிலங்களை விவசாயத்திற்கே குத்தகைக்கு விட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குழப்பம்

தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், அதிகாரிகளும் இது தொடர்பாக பேச மறுக்கிறார்கள். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை சில மாதங்களுக்கு பிறகே அரிவிக்கும் என தெரிகிறது. ஒருவேளை இத்திட்டம் கைவிடப்பட்டால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றாலும், மாற்று இடத்தைத் தேர்வு செய்து பணிகளை தொடங்க மேலும் சில ஆண்டுகளாவது ஆகும் என்பதால் தொழில்துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும்.

கடந்த 2022 முதல் ஏகனாபுரம் இப்போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. இங்குள்ள 605 வீடுகளும் சுமார் 900 ஏக்கர் விளைநிலங்களும் இத்திட்டத்தால் முழுமையாக அழியும். பரந்தூர், நாகப்பட்டு, நெல்வாய் போன்ற பிற கிராமங்களில் போராட்டங்கள் காலப்போக்கில் தணிந்தாலும், ஏகனாபுரம் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரமான நிலமும் வீடும் பறிபோனால், சொந்த மாவட்டத்திலேயே அகதிகளாக மாற நேரிடும் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களுக்கு அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் காத்திருக்கின்றனர்.

நிலம்

சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்திற்கு மொத்தம் 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் ஏற்கனவே டிட்கோ 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளதுடன், அரசுக்குச் சொந்தமாக 1,500 ஏக்கர் நிலம் அங்கு உள்ளது. மீதமுள்ள சுமார் 2,500 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

சென்னை பெங்களூர் விரைவுச்சாலை மற்றும் திருமால்பூர் ரயில் நிலையம் அருகில் இருப்பதால் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும், அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நிலத்தை முன்கூட்டியே வாங்கி லாபம் ஈட்டுவதற்காகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் மீறித் திணிக்கப்படுவதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசு வசம் உள்ளதாகக் கூறப்படும் நிலங்களில் பெரும்பாலானவை நீர்நிலைகள் என்றும் அங்கு ஏர்போர்ட் அமைப்பது சென்னை மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *