`சட்டம் தன் கடமையைச் செய்யும், ஆனால் சில நேரங்களில் அது தூங்கிவிடும்; எனினும் இறுதியில் விழித்துக்கொள்ளும்” என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளி, பரோலில் வெளியே வந்து, 40 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து, அரசுப் பள்ளி ஆசிரியராகி, `சிறந்த ஆசிரியர்’ விருதும் பெற்று, ஓய்வூதியமும் வாங்கி வாழ்ந்த பிறகு, தனது 77-வது வயதில் மீண்டும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ள இச்சம்பவம், நிர்வாக அமைப்பின் அலட்சியத்தையும் சட்டத்தின் பிடியையும் ஒருசேரப் படம் பிடித்துக் காட்டுகிறது.

1970-களின் இறுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய சந்தேலா வீரண்ணா என்பவருக்கு, 1983-ம் ஆண்டு வாரங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனை பெற்று வெறும் 6 மாதங்கள் மட்டுமே அவர் சிறையில் கழித்தார். 1983 டிசம்பர் மாதம் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டு, பின்னர் அது 1984 மார்ச் 17 வரை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 18, 1984 அன்று அவர் மீண்டும் சிறையில் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் வீரண்ணா சிறைக்குத் திரும்பவில்லை; காற்றில் கரைந்தது போல் மாயமானார்.